லாலு கட்சி பேரணியில் கல்வீச்சு: காவலருக்கு காயம்

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) இளைஞரணி சார்பில் பிகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டதாகத் தெரிகிறது.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) இளைஞரணி சார்பில் பிகாரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரணியின்போது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே மோதல் மூண்டதாகத் தெரிகிறது.
அப்போது ஆர்ஜேடி கட்சியினர் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும், அதில் காவலர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீஜன் என்ற தன்னார்வ அமைப்புக்கு நிதீஷ் குமார் தலைமையிலான பிகார் அரசு முறைகேடாக பல கோடி ரூபாய் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், மாநில முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்றும் லாலு பிரசாத் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு பாட்னாவில் அமைந்துள்ள மாநில ஆளுநர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று கோரிக்கை மனு அளிக்க ஆர்ஜேடி இளைஞரணியினர் திட்டமிட்டனர். அதன்படி, வியாழக்கிழமை அவர்கள் பேரணியாக ஆளுநர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, ஆர்ஜேடி கட்சியினர் போலீஸாரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் காவலர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
அதேவேளையில், ஆர்ஜேடி இளைஞரணித் தலைவர் காரி சோஹிப் அதனை மறுத்துள்ளார். போலீஸார் தங்கள் மீது தடியடி நடத்தியதாகவும், தண்ணீரை பீய்ச்சியடித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com