வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நிரந்தரக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்

வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் நிரந்தரக் குழு அமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட சில வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை பிறப்பித்த வழிகாட்டுதல்கள்:
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிரந்தரக் குழுவுடன் சூழ்நிலைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோரும் அந்தக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பார் கவுன்சில் பிரதிநிதி, அட்டார்னி ஜெனரல் ஆகியோரும் குழுவில் இடம் பெறுவர். மூத்த வழக்குரைஞர்களாகப் பதவி உயர்வு பெற தகுதி உள்ளவர்களின் விவரங்களை இந்தக் குழு சேகரிக்கும். மேலும், அவர்களின் பணி முன் அனுபவம், அவர்கள் வாதாடிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள், பொது நல வழக்குகளை அவர்கள் கையாண்ட விதம், அவர்களுடைய ஆளுமை ஆகியவை ஆய்வு செய்யப்படும். 
பதவி உயர்வு அளிக்க வழக்குரைஞர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அவர்களுடைய ஆளுமை சோதிக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு கருத்துகள் வரவேற்கப்படும்.
அதன்பிறகு, நிரந்தரக் குழு ஒப்புதல் அளிக்கும் வழக்குரைஞர்களின் பெயர்கள், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் கொண்டுவரப்படும். 
அங்கு, ஒருமனதாகவோ அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தியோ வழக்குரைஞர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படும் என்று அந்த அமர்வு தெரிவித்தது.
முன்னதாக, வழக்குரைஞர்களை மூத்த வழக்குரைஞர்களாக்கும் தற்போதைய நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் பதவி உயர்வு அளிக்கும் முறையில் வெளிப்படத்தன்மையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். "அமெரிக்காவில் மூத்த வழக்குரைஞர், ஜுனியர் வழக்குரைஞர் என்ற நடைமுறை இல்லை. காமன்வெல்த் நாடுகளில்தான் இதுபோன்ற நடைமுறை நிலவுகிறது' என்றும் அவர் வாதம் முன்வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com