டார்ஜீலிங்கில் வன்முறை: எஸ்.ஐ. சுட்டுக் கொலை; 4 காவலர்கள் காயம்

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் அருகே உள்ள வனப் பகுதியில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சித் தலைவர் பிமல் குருங்கை போலீஸார் தேடிச் சென்றபோது நடைபெற்ற

மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் அருகே உள்ள வனப் பகுதியில் கோர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜிஜேஎம்) கட்சித் தலைவர் பிமல் குருங்கை போலீஸார் தேடிச் சென்றபோது நடைபெற்ற வன்முறையில் காவல் துறை உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 4 காவலர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பட்லபாஸ் பகுதி அருகே உள்ள வனப் பகுதியில் ஜிஜேஎம் தலைவர் பிமல் குருங் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியில் எஸ்.ஐ. அமிதபா முல்லிக் தலைமையில் காவலர்கள் வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தப் பகுதியில் இருந்த ஜிஜேஎம் ஆதரவாளர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அமிதபா உயிரிழந்தார். மேலும், 4 காவலர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, அந்தப் பகுதியை சுற்றி வளைத்த போலீஸார், முழு வீச்சில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறை நிகழ்ந்த பகுதியில் இருந்து துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. ஜிஜேஎம் ஆதரவாளர்கள் கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜிஜேஎம் அங்கம் வகித்து வருகிறது. டார்ஜீலிங்கை தனிமாநிலமாக்கக் கோரி 104 நாள்களாக ஜிஜேஎம் ஆதரவாளர்கள் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்த விஷயத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்ததை அடுத்து, கடந்த மாதம் 26}ஆம் தேதி அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
போராட்டத்தை வழிநடத்தியதற்காகவும், குண்டு வெடிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் அரங்கேறியதற்காகவும் பிமல் குருங்குக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடப்படும் நபராக காவல் துறை அறிவித்தது. அப்போது முதல் அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆதரவாளர்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக ஜிஜேஎம் கட்சியினர் தெரிவித்தனர். போலீஸார் இதுகுறித்து பதிலளிக்கவில்லை. 
"டார்ஜீலிங்கை காஷ்மீராக மாற்ற அனுமதிக்காதீர்கள்': இதனிடையே, டார்ஜீலிங் மலைப் பகுதியை காஷ்மீராக மாற்ற பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது என்று ஜிஜேஎம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பினய் தமாங் தெரிவித்தார்.
முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக அவர் கொல்கத்தா வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில், "டார்ஜீலிங் பகுதியில் தற்போது அமைதியான சூழல் திரும்பி வருகிறது. அதை சீர்குலைக்கும் பணியில் பிமல் குருங்கும், அவருடைய ஆதரவாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com