சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா

சாமுண்டீஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சாமுண்டீஸ்வரி தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா

சாமுண்டீஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் தன்னை தோற்கடிக்க முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மைசூரு  விமான நிலையத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடக சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டில் நடைபெறும் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட உள்ள  என்னை (சித்தராமையா) தோற்கடிக்க எனது அரசியல் எதிரிகள் கைகோர்த்திருக்கிறார்கள்.   அவர்களின் கனவு பலிக்காது.

தோல்வி மன நிலையில் பேசிவரும் பாஜகவின் மூத்தத் தலைவர் சீனிவாஸ் பிரசாத் குறித்து கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.  எதிரியின் எதிரி நண்பன் என்று அரசியல் எதிரிகள் ஒன்றாகக் கைகோர்த்து தோற்கடிக்க முற்பட்டிருப்பதற்காக  அஞ்ச மாட்டேன்.

2006-ஆம் ஆண்டில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் என்னை (சித்தராமையா) தோற்கடிக்க அரசியல் எதிரிகள் ஒன்றாகியிருந்தனர்.   முன்னாள் பிரதமர் தேவெ கெளடா,  அன்றைய முதல்வர் குமாரசாமி,  அன்றைய துணைமுதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் 15 நாள்கள் தொகுதியில் முகாமிட்டு,  தேர்தல் பணியாற்றியும் வெற்றி பெற்றேன்.  அதுபோன்ற சூழ்நிலையிலும் மக்கள் என்னை கைவிடவில்லை.  மக்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பேன்.

சமுதாயத்தைப் பிளவுபடுத்தவும்,  ஜாதிகளுக்கு இடையே தகராறை ஏற்படுத்தவும் பாஜகவினர் மறுமலர்ச்சிப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.   ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதத்தைத் தூண்டி விடுகிறார்கள்.  ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் குறித்து பாஜகவினர் பேசுவதேயில்லை.  சமூக நீதியில் பாஜகவினருக்கு நம்பிக்கையே இல்லை.

மழை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யலாமா?
பெங்களூரில் 46 நாள்கள் தொடர்ந்து மழை பெய்து வருவதால்,  ஒருசில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.   850 கி.மீ.  நீளத்தில் உள்ள ராஜகால்வாய்  ஆக்கிரமிப்புகளை முந்தைய ஆட்சியாளர்கள் அகற்றவில்லை.   தூரும் வாரப்படவில்லை. காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்தபிறகு 350 கி.மீ. நீளத்துக்கு ராஜகால்வாயை சீர்படுத்தியுள்ளோம்.  இதற்காக ரூ.800கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  

மழையில் உயிரிழந்தவர்களை வைத்துக்கொண்டு அரசியல் நடத்தும் பாஜகவினர் ஆட்சியில் இருந்தபோது இதை சரிசெய்ய முடியவில்லை.

அளவுக்கு அதிகமான மழை பெய்ததற்கு அரசு  காரணமாக முடியுமா?
பெங்களூரில் டெண்டர் ஷ்யூர் சாலைகள், கான்கிரீட் சாலைகளை அமைத்தது காங்கிரஸ் அரசு.   ஆனால்,  ஆட்சியில் இருந்தபோது,  பெங்களூரு மேம்பாட்டுக்கு பாஜகவினர் எதையும் செய்யவில்லை.

விதான செளதா கட்டடத்தின் வைரவிழாவுக்கான ஏற்பாடுகளில் மாநில அரசின் பங்கு எதுவுமில்லை.  அது முழுக்க முழுக்க சட்டப் பேரவை,  மேலவைத் தலைவர்களின் ஏற்பாடாகும்.

கேரளத்தைப் போல,  கர்நாடகத்திலும் கோயில்களில் தாழ்த்தப்பட்டோரை அர்ச்சகர்களாக நியமிப்பதில் எவ்விதத் தடையும் இல்லை.

எனவே,  அந்தத் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com