முடிவுக்கு வருகிறது ரயில் பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டும் வழக்கம்!

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள், ரயில்களில் ஏறுவதற்கு முன்னர் தங்கள் முன்பதிவை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட பெட்டிகளில் காகித அட்டவணைகளை ஒட்டும்
முடிவுக்கு வருகிறது ரயில் பெட்டிகளில் முன்பதிவு அட்டவணை ஒட்டும் வழக்கம்!

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து கொண்டவர்கள், ரயில்களில் ஏறுவதற்கு முன்னர் தங்கள் முன்பதிவை மீண்டும் உறுதி செய்து கொள்வதற்காக குறிப்பிட்ட பெட்டிகளில் காகித அட்டவணைகளை ஒட்டும் வழக்கத்தை தென் கிழக்கு ரயில்வே திங்கள்கிழமை (அக். 16) முடிவுக்குக் கொண்டு வருகிறது.
குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள், இணையதளம் போன்ற தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில், ரயில் பெட்டிகளின் அழகைக் கெடுக்கும் வகையில் அதில் அட்டவணைகளை தினமும் ஒட்டிக் கிழிக்கும் முறையைக் கைவிட அந்த மண்டல ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென் கிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் சஞ்சோய் கோஷ் கூறியதாவது:
ஒவ்வொரு முறை ரயில்கள் புறப்படுவதற்கும் முன், அவற்றின் பெட்டிகளில் முன்பதிவு விவரங்கள் அடங்கிய அட்டவணையை ஒட்டும் நீண்ட கால வழக்கம், திங்கள்கிழமையிலிருந்து படிப்படியாக நிறுத்தப்படுகிறது. முதலில், மேற்கு வங்கத்தின் ஹெளரா ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்களில் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
அட்டவணைகளை ஒட்டும் வழக்கம் நிறுத்தப்படுவதால், ரயில் பெட்டிகளின் வெளிப்புறம் சுத்தமாகவும், அழகாகவும் இருக்கும். அத்துடன், இதன் காரணமாக ஏராளமான காகித உபயோகமும் குறைக்கப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு சாதகமான நிலை ஏற்படும்.
இதுவரை ரயில்களில் ஏறுவதற்கு முன்னர் பயணிகள் தங்கள் முன்பதிவு நிலவரத்தை அட்டவணைகள் மூலம் அறிந்துகொள்வதற்காக வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
ஆனால், செல்லிடப் பேசி குறுந்தகவல்கள், இணையதளம் போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்பதிவு நிலவரத்தை அறிந்து கொள்ளும் வசதிகள் அறிமுகமான பிறகு, அட்டவணையைப் பார்த்தாக வேண்டியதன் அவசியம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றார் அவர்.
ரயிலில் பயணிகள் முன்பதிவு செய்யும்போது, இருக்கை உறுதி செய்யப்பட்ட பயணிகளுக்கு ரயில் பெட்டியின் வரிசை எண், இருக்கை எண் போன்ற விவரங்கள் அவர்களுக்கான பயணச் சீட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், காத்திருப்புப் பட்டியலிலும், ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு பதிலாக இருக்கை ஒதுக்கீடு செய்வதற்காகப் பதிவு செய்துகொண்டுள்ள பயணிகளுக்கும் அவர்களது முன்பதிவு குறித்த விவரங்களை கடைசி நேரத்தில்தான் தெரிந்துகொள்ள முடியும்.
அதற்காக, முன்பதிவு குறித்த இறுதி நிலவரத்தை, ரயில்வே நிர்வாகம் அட்டவணையாக ரயில் நிலையங்களிலும், பெட்டிகளிலும் ஒட்டி வருகிறது.
எனினும், அதற்கு மாற்றாக, இணைய தளம் மூலமும், 139 என்ற சேவை எண்ணை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதன் மூலமும் பயணிகள் தங்களது முன்பதிவு விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வசதியை ரயில்வே துறை வழங்கி வருகிறது. மேலும், பல ரயில் நிலையங்களில் முன்பதிவு விவரங்களை வழங்கும் மின்னணு பலகைகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், தென் கிழக்கு ரயில்வே நிர்வாகம் காகித அட்டவணைகளை ஒட்டும் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com