'நாங்கள் ஆருஷிக்காகத்தான் போராடினோம்.. விடுதலைக்காக மட்டுமல்ல'

ஆருஷி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோரும் பல் மருத்துவர்களுமான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் தஸ்னா சிறையில் இருந்து திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
'நாங்கள் ஆருஷிக்காகத்தான் போராடினோம்.. விடுதலைக்காக மட்டுமல்ல'


புது தில்லி: ஆருஷி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரது பெற்றோரும் பல் மருத்துவர்களுமான ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகியோர் தஸ்னா சிறையில் இருந்து திங்கள்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

ராஜேஷின் சகோதரர் தினேஷ் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் சிறை வாசலில் காத்திருந்து விடுதலை பெற்ற தம்பதியை வரவேற்றனர். அப்போது, ராஜேஷ், நூபுர் இருவரும் கண்ணீர்மல்க சிறையில் இருந்து வெளியேறினர். அவர்கள் 3 ஆண்டு 10 மாதம் வரை சிறையில் இருந்தனர்.

கையில் இரண்டு பைகளுடன் சிறைச்சாலைக்குள் இருந்து வெளியேறிய தல்வார் தம்பதியினர் மிகவும் உணர்ச்சிவயப்பட்டவர்களாகக் காணப்பட்டனர். சுமார் 4 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சோர்வு அவர்களிடம் அப்பட்டமாகத் தெரிந்தது.

தங்களை சுற்றி இருக்கும் செய்தியாளர்கள், காவல்துறையினரை எந்த சலனமும் இல்லாமல் கடந்து வந்த தல்வார் தம்பதியினர், ராஜேஷின் சகோதரர் தினேஷ் மற்றும் அவர்களது வழக்குரைஞரைப் பார்த்ததும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர். தினேஷைக் கட்டிக் கொண்டு சில நிமிடங்கள் அழுத தம்பதியினர், பிறகு தங்களது காரில் ஏற புறப்பட்டனர். 

அப்போது அவர்களை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்களிடம்  பேச மறுத்துவிட்டனர். அப்போது அவர்களது உறவினர் ஒருவர், "அவர்களது உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்குத் தேவையான தனிமையை அளியுங்கள்" என்று கோரினார்.

இருவரும், நொய்டாவில் உள்ள நூபுரின் பெற்றோர் வீட்டுக்குச் சென்றனர். அங்கே செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷின் சகோதரர் தினேஷ், "ராஜேஷ், நூபுர் விடுதலைக்காக போராடியதை விட, ஹேம்ராஜுடன் இணைத்துப் பேசிய எங்கள் மகள் ஆருஷியின் பெயரைக் காப்பாற்றவே நாங்கள் அதிகம் போராடினோம். இப்போது எங்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது" என்றார்.

நூபுரின் தந்தை சித்னிஸ் கூறுகையில், எங்கள் மகளும், மருமகனும் கைது செய்யப்பட்டதில் இருந்தே நாங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. இந்த ஆண்டுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி வந்திருக்கிறது. ஆனாலும் இந்த நிமிடத்தில் நாங்கள் ஆருஷி இல்லாதது குறித்து வேதனைப்படுகிறோம் என்றார்.

வழக்கின் பின்னணி: 
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்களான ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் தம்பதியின் ஒரே மகள் ஆருஷி (14). இவர் தில்லியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். அவரது வீட்டில் ஹேமராஜ் (45) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி நள்ளிரவில் ஆருஷியும், ஹேமராஜும் கொலை செய்யப்பட்டனர். 16-ஆம் தேதி ஆருஷியின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. ஹேமராஜ் மாயமானதால் அவர்தான் கொலை செய்திருப்பார் என்று போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. 

இருப்பினும், மறுநாள் அதே வீட்டின் மாடியில் ஹேமராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. 2 பேரும் 15-ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலம் உறுதி செய்யப்பட்டது. ராஜேஷ் தல்வாரை போலீஸார் சந்தேகித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே, இந்த வழக்கை உத்தரப் பிரதேச போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனம் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, அப்போதைய உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த இரட்டை கொலை வழக்கில், ராஜேஷ் தல்வார், நூபுர் தல்வார் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என்று அறிவித்த காஜியாபாத் சிபிஐ நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, காஜியாபாத்தின் தஸ்னா சிறையில் அத்தம்பதி அடைக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் கடந்த 12-ஆம் தேதி அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, நான்கு நாள்களுக்குப் பிறகு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

சிறைப் பணிக்கான ஊதியத்தைவாங்க மறுத்த தம்பதி

பல் மருத்துவர்களான ராஜேஷ், நூபுர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து கைதிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதற்கான ஊதியமாக சிறைத் துறை சார்பில் அவர்களுக்கு ரூ.49,500 அளிக்கப்பட்டது. ஆனால், சிறையில் இருந்து வெளியேறியபோது இத்தொகையை வாங்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

அவர்கள் விடுதலை செய்யப்படும் தகவல் தெரியவந்ததை அடுத்து, ஏராளமான கைதிகள் அவர்களிடம் அவசரமாக சிகிச்சை பெற்றனர். விடுதலையான பிறகும் கூட 15 நாள்களுக்கு ஒருமுறை தஸ்னா சிறைக்குச் சென்று கைதிகளுக்கு சிகிச்சை அளிக்க அத்தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு சிறை நிர்வாகமும் அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com