காங்கிரஸுடன் கூட்டணியா? மார்க்சிஸ்ட் மத்தியக் குழு கூட்டத்தில் விவாதம்

வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்

வரும் 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தில்லியில் மூன்று நாள்கள் நடைபெற்ற இந்தக் கூட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதில், கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் ஒரு தரப்பினர், அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினர். 
முக்கியமாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் தலைவர்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மற்றொரு தரப்பினர் காங்கிரஸ் அல்லாத பிற மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தனர்.
இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு நடைபெறும் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்துக்கு முன்பு இறுதி முடிவு எடுக்கப்படும். 
இது தொடர்பான முடிவை எடுக்க கட்சியின் ஆட்சி மன்றக் குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை இணைந்து நடத்தும் அராஜகத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடிபணிந்துவிடாது. மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
கேரளத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி பாஜக நடத்தும் பேரணி எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. 
மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் போராடி வரும் தொழிற்சங்கங்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com