பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணியில் 66 இயந்திரங்கள்: ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியில் 66 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன
பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணியில் 66 இயந்திரங்கள்: ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் செலுத்தப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஆய்வு செய்து சரிபார்க்கும் பணியில் 66 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிடிஐ செய்தியாளர் தாக்கல் செய்திருந்த மனுவுக்கு ரிசர்வ் வங்கி மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது. அதில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு, பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணி சரிபார்ப்பதற்காக, அதிநவீன இயந்திரங்களை வாங்குவதற்கு சர்வதேச அளவில் ஒப்பந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது வரை, ரிசர்வ் வங்கியின் கிளைகளில் பழைய ரூபாய் நோட்டுகளை சரிபார்க்கும் பணியில் 59 அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு இயந்திரமும், ஒரு மேற்பார்வையாளரின் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவால் இயக்கப்பட்டு வருகிறது. இதுதவிர, 7 இயந்திரங்கள், வர்த்தக வங்கிகளின் கிளைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
7 இயந்திரங்கள் வாடகைக்குப் பெறப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் வாடகைக் கட்டணம் குறித்து தெரிவிக்க இயலாது.
ஏனெனில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் 8(1) பிரிவின்படி, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர் உத்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளிநாடுகளுடனான உறவு ஆகியவற்றைப் பாதிக்கும், குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்த வேண்டும் என்று அறிவித்தது.
அதன்படி, மதிப்பிழப்பு செய்யப்பட்ட செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள், நிபந்தனைகளின் அடிப்படையில் வங்கிகளில் செலுத்தப்பட்டன. அந்த ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணியை நிறைவு செய்துவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியிட்ட ஆண்டறிக்கையில், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மொத்தம் ரூ.15.28 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன; இது புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com