மக்கள் சக்திதான் மத்திய அரசை கட்டுப்படுத்த வேண்டும்

மக்கள் சக்திதான் மத்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
மக்கள் சக்திதான் மத்திய அரசை கட்டுப்படுத்த வேண்டும்

மக்கள் சக்திதான் மத்திய அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இது தொடரர்பாக, மகாராஷ்டிரத்தின் விதர்பா மண்டலத்தில் உள்ள அகோலா நகரில் விவசாயிகளுக்கான தன்னார்வ அமைப்பான ஷேத்காரி ஜாகரன் மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
அரசின் மீது மக்கள் சக்தியின் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பது சோஷலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கருத்தாகும். அதையே நான் இப்போது வலியுறுத்துகிறேன். இந்த அகோலா நகரில் இருந்து மக்கள் சக்திக்கான முன்முயற்சிகளைத் தொடங்குவோம்.
ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியை நாம் சந்தித்து வருகிறோம். அப்படி இருக்கும்போது எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களில் என்ன இருக்கிறது? எண்களால் ஒரு விஷயத்தை நிரூபிக்க முடியும். அதே எண்களால் மறுதரப்பின் வாதத்தையும் நிரூபிக்க முடியும். 
மத்திய அரசின் தலைவர் (பிரதமர் நரேந்திர மோடி) அண்மையில் தனது ஒரு மணிநேர உரையில், இந்தியாவின் வளர்ச்சியைக் காட்டுவதற்காக பல்வேறு எண்களைக் குறிப்பிட்டார். ஏராளமான மோட்டார்சைக்கிள்களும், கார்களும் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறினார். அதற்கு இந்தியா முன்னேறுகிறது என்று அர்த்தமா?விற்பனை இருக்கிறது. ஆனால் உற்பத்தி நடக்கிறதா? என்பதுதான் கேள்வி.
இந்த நிகழ்ச்சியில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து பேசுவதை நான் தவிர்க்கிறேன். ஏனெனில், தோற்றுப்போன ஒரு விஷயத்தைக் குறித்து என்ன பேசுவது? என்பதுதான் காரணம். ஜிஎஸ்டி வரிவிதிப்பானது சிறந்த மற்றும் எளிய வரிவிதிப்பு என்று மத்திய அரசு கூறுகிறது. இந்த வரிவிதிப்பானது சிறந்ததாகவும், எளிதாகவும் இருந்திருக்க முடியும். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் அதை மோசமானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் ஆக்கி விட்டனர். 
ஜிஎஸ்டி வரிவிதிப்பின் அமலாக்கத்தில் உள்ள முரண்பாடுகளைக் களைவது அரசின் கடமையாகும்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக மத்திய அரசை விமர்சித்து அண்மையில் நான் நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தேன். இந்த விஷயத்தில் தாங்கள் நினைப்பதையே நானும் கூறியிருப்பதாக மக்கள் கருதுகிறார்கள்.
நான் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவன். அங்கு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதில்லை. 
ஆனால் கடந்த சில நாள்களில் அங்குள்ள விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது எனக்குத் தெரியாது என்றார் யஷ்வந்த் சின்ஹா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com