ரயில்வே உணவக ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை முன் 4-ஆவது முறையாக ஆஜராகாத ராப்ரி தேவி

ரயில்வே உணவக ஊழல் வழக்கு தொடர்பாக, பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவ் நான்காவது முறையாக அமலாக்கத் துறை முன்பு ஆஜராகாமல் தவிர்த்து விட்டார்.
ரயில்வே உணவக ஊழல் வழக்கு: அமலாக்கத்துறை முன் 4-ஆவது முறையாக ஆஜராகாத ராப்ரி தேவி

ரயில்வே உணவக ஊழல் வழக்கு தொடர்பாக, பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவ் நான்காவது முறையாக அமலாக்கத் துறை முன்பு ஆஜராகாமல் தவிர்த்து விட்டார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாம் ஆட்சிக் காலத்தில் (2004-2009) ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்தார்.
அப்போது ரயில்வே துறைக்குச் சொந்தமான 2 உணவகங்களை பராமரிக்கும் பொறுப்பை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு அவர் விதிகளை மீறி ஒதுக்கியதாகவும், இதற்கு கைமாறாக அந்த நிறுவனம் பிகார் மாநிலம் பாட்னாவில் முக்கியமான இடத்தில் உள்ள நிலத்தை அளித்ததாகவும் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. 
லாலு குடும்பத்துக்கு லஞ்சமாக இந்த நிலத்தை அளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் பிரேம் சந்த் குப்தாவின் மனைவி சரளா குப்தாவின் பினாமி நிறுவனம் பயன்படுத்தப்பட்டதாகவும் சிபிஐ கடந்த ஜூலை 5-ஆம் தேதி பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டது. 
இவ்வழக்கு தொடர்பாக லாலு உள்ளிட்டோரின் வீடுகளில் அதிரடிச்சோதனையும் நடத்தப்பட்டது.
இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் லாலு மற்றும் அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ராப்ரிதேவி, அவர்களது மகனும் அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை, சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது. 
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ராப்ரி தேவிக்கு அமலாக்கத்துறை ஏற்கெனவே மூன்று முறை அழைப்பாணைகளை (சம்மன்) அனுப்பியிருந்தது. 
எனினும், அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணைக்கு அக்டோபர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி ராப்ரி தேவிக்கு அமலாக்கத்துறை நான்காவது முறையாக அழைப்பாணை அனுப்பியது. எனினும், அவர் இந்த முறையும் அத்துறை அதிகாரிகள் முன் திங்கள்கிழமை ஆஜராகவில்லை. 
அவர் ஆஜராகாததற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்பட்டதா என்ற விவரமும், இது தொடர்பாக அமலாக்கத்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதாக, இவ்வழக்கு தொடர்பாக ராப்ரி தேவியின் மகன் தேஜஸ்வி யாதவிட ம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சுமார் 9 மணிநேரம் விசாரணை நடத்தினர். 
அதன் பின் 12-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. எனினும், அவர் இரண்டாவது முறை ஆஜாராகாமல் தவிர்த்து விட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com