ஹிமாசல் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களை வரவேற்க காத்திருக்கும் பாஜக

ஹிமாசலப் பிரேதச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் அதிருப்தி தலைவர்களை வரவேற்பதற்கு பாஜக காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிமாசலப் பிரேதச சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் அதிருப்தி தலைவர்களை வரவேற்பதற்கு பாஜக காத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிமாசலப் பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரம் காட்டி வருகின்றன. 
இந்நிலையில், பாஜகவின் மத்திய வேட்பாளர் தேர்வுக் குழு கடந்த சனிக்கிழமை கூடி, 60 வேட்பாளர்களை இறுதி செய்துள்ளது. ஆனால், அந்த வேட்பாளர் பட்டியல், மாநிலத் தலைவர்களுக்கு அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர், சனிக்கிழமை கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கட்சியினரிடையே கருத்து வேறுபாடு வரக்கூடாது என்று மாநிலத் தலைவர்களிடம் மேலிடத் தலைவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். 
முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம், அவரது மகனும், அமைச்சருமான அனில் சர்மா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர். இதேபோல், காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் பலர், பாஜகவில் இணைவார்கள் என்று கட்சி மேலிடம் நம்புகிறது.
இவ்வாறு பாஜகவில் இணையும் காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கோரினால், அவர்களைத் தக்கவைப்பதற்கு சீட் வழங்கப்பட வேண்டும். 
மேலும், கடந்த சனிக்கிழமை தயாரான பட்டியலில், போதிய அளவில் பெண் வேட்பாளர்கள் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. 
எனவே, மேலும் பல பெண் வேட்பாளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்து பாஜக மேலிடம் பரிசீலித்து வருகிறது.
பாஜகவில் இணையும் காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர்களை அமித் ஷா ஏற்றுக் கொள்கிறார். மேலும், கட்சி பலவீனமாகக் காணப்படும் தொகுதிகளில் வலுவான, செல்வாக்கு மிக்கவர்களை வேட்பாளராக நிறுத்துவதை அமித் ஷா விரும்புகிறார் என்று அந்த மூத்த தலைவர் கூறினார்.
காங்கிரஸ் பிரசாரக் குழுத் தலைவர் மாற்றம்: இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக, கட்சியின் மாநிலத் தலைவர் சுக்வீந்தர்சிங் சுகுவுக்குப் பதிலாக, முதல்வர் வீரபத்ர சிங்கை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் இல்லை: வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாளான திங்கள்கிழமை, ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், எதிர்க்கட்சியான பாஜகவில் இருந்தும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com