ஆயுர்வேதம் இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி

'ஆயுர்வேதம் என்பது, இந்தியாவின் பலமாகும். இந்த மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் இதைப் புதுப்பிக்க வேண்டும்.
நாட்டிலேயே முதன் முறையாக தில்லியில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய ஆயுர்வேதக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் தன்வந்திரி பகவான் சிலைக்கு அருகே குத்து விளக்கேற்றும் பிரதமர் மோடி.
நாட்டிலேயே முதன் முறையாக தில்லியில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய ஆயுர்வேதக் கல்வி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் தன்வந்திரி பகவான் சிலைக்கு அருகே குத்து விளக்கேற்றும் பிரதமர் மோடி.

'ஆயுர்வேதம் என்பது, இந்தியாவின் பலமாகும். இந்த மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் இதைப் புதுப்பிக்க வேண்டும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுர்வேதம் தொடர்புடைய மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நாட்டிலேயே முதலாவதாக தில்லியில் அமைக்கப்பட்டுள்ள அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனத்தை பிரதமர் செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆயுர்வேத தினத்தில் (அக். 17) நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது:
உலகம் தற்போது இயற்கை சார்ந்த நல்வாழ்வு என்ற சிந்தனைக்குத் திரும்பியுள்ளது. மிகவும் தொன்மையான பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் என்பது இந்தியாவின் பலமாகும். இந்த மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்கள் இதைப் புதுப்பிக்க வேண்டும். மேலும், அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதைப் போல் ஆயுர்வேதத் துறை நிபுணர்களும் மருந்துகளைக் கண்டறிய வேண்டும். அவை பக்க விளைவுகள் ஏதும் இல்லாதவையாக இருக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்பு நிதியின் ஒரு பங்கை ஆயுர்வேதத்தை வலுப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டதை நாம் கண்டோம். தற்போது ஆயுர்வேதம் என்ற குடையின் கீழ் ஆரோக்கியப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான தருணம் வந்துள்ளது. ஆயுர்வேதத்தை வலுப்படுத்தவும், புதுப்பிக்கவும் உறுதியேற்போம்.
இந்தியா அடிமை நாடாக இருந்தபோது, அதன் பலங்களை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயுர்வேத மருத்துவ முறையும் இதனால் பாதிக்கப்பட்டது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் அரசின் முன்னுரிமைத் திட்டங்களில் ஒன்றாக ஆயுர்வேதம் மாறவில்லை.
இந்நிலையில், தற்போது இந்த மருத்துவ முறையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆயுர்வேதத்தை விரிவாக்குவதும், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஆயுர்வேதம் தொடர்புடைய மருத்துவமனைகள் அமைக்கப்படுவதும் அவசியமாகும். இந்த நோக்கில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 65-க்கும் மேற்பட்ட ஆயுஷ் மருத்துவமனைகள் மேம்படுத்தப்பட்டன. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தற்போது நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுவை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். ஆயுர்வேதச் சூழலை உருவாக்குவதற்கு காலம் கனிந்துள்ளது.
ஆயுர்வேத பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். மேலும் அலோபதி முறையானது ஆயுர்வேதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தடுப்பதற்கு, நிலையான நெறிமுறைகளை வகுப்பதும், சிசிச்சைகளும் முக்கியத் தேவையாகும். அரசு, அனைத்து வகையான ஆரோக்கிய மற்றும் மருத்துவ முறைகளையும் மதிக்கிறது. மேலும், குறைந்த செலவில் தரமான மருத்துவச் சேவை மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.
ஆயுஷ் மற்றும் வேளாண் அமைச்சகங்கள் , விவசாயிகளுக்கு தங்கள் நிலங்களில் மருத்துவச் செடிகளை நடுவது குறித்து வழிகாட்ட முடியும். இது விவசாயிகள் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள உதவும். நாடு தனது 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ள 2022-ஆம் ஆண்டின்போது விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்ற அரசின் திட்டத்தின் அடிப்படையில் இது அமைந்திருக்கும். நோய்கள் வருவதற்கு முன் காப்பதற்கு தூய்மை மிகவும் முக்கியம் என்றார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com