இந்தியாவின் பணக்காரக் கட்சி பாஜக! ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக அதிக மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருந்த கட்சியாக பாஜக திகழ்ந்துள்ளது.

கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் அரசியல் கட்சிகளில் மிக அதிக மதிப்பிலான சொத்துகளைக் கொண்டிருந்த கட்சியாக பாஜக திகழ்ந்துள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அளிக்கும் நிதிநிலை அறிக்கை விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் கட்சிகளின் சொத்து மற்றும் பொறுப்புகள் குறித்த ஆய்வறிக்கையை ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ரூ.893.88 கோடி சொத்துகளைக் கொண்டிருந்த பாஜக, இந்தியக் கட்சிகளிலேயே மிக அதிக சொத்து மதிப்பைக் கொண்ட கட்சியாக இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துகளின் வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு முந்தைய 11 ஆண்டுகளில் மிக அதிக அளவாக 17,896 சதவீதம் வளர்ச்சியடைந்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் மாயாவதியின் தலைமையிலான பகுஜன் சமாஜன் கட்சியின் சொத்து மதிப்பு 1,197 சதவீதமும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சொத்து மதிப்பு 809 சதவீதமும் வளர்ச்சியடைந்தது.
பாஜக-வின் சொத்து மதிப்பு, கடந்த 11 ஆண்டுகளில் 627 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. கடன் உள்ளிட்ட பொறுப்புகளைப் பொருத்தவரை, காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு மதிப்பு கடந்த 11 ஆண்டுகளில் மிக அபாயகரமான அளவாக 4,000-க்கும் மேற்பட்ட சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சொத்து மதிப்பு சில ஆண்டுகளில் மிக வேகமாகவும், சில ஆண்டுகளில் மிகக் குறைவாகவும் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு நிலையான வளர்ச்சி விகிதத்தை கொண்டிருந்தது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com