சூரிய மின் தகடு ஊழல் விசாரணை அறிக்கை நகலைப் பெற சட்ட நடவடிக்கை

"சூரிய மின் தகடு (சோலார் பேனல்) ஊழல் தொடர்பான நீதிபதி சிவராஜன் விசாரணை அறிக்கையின் நகலைப் பெற, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பேன்' என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
சூரிய மின் தகடு ஊழல் விசாரணை அறிக்கை நகலைப் பெற சட்ட நடவடிக்கை

"சூரிய மின் தகடு (சோலார் பேனல்) ஊழல் தொடர்பான நீதிபதி சிவராஜன் விசாரணை அறிக்கையின் நகலைப் பெற, சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பேன்' என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சூரிய மின்தகடுகளைப் பொருத்தித் தருவதாகக் கூறி, பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், முக்கியக் குற்றவாளியான சரிதா நாயருடன் தொடர்பு உள்ளதாக உம்மன் சாண்டி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மீது புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக, நீதிபதி சிவராஜன் தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை கேரள அரசிடம் கடந்த மாதம் சமர்ப்பித்தது.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கடந்த 11-ஆம் தேதி கூடிய மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முறைகேடு தொடர்பாக உம்மன் சாண்டி உள்ளிட்டோருக்கு எதிராக ஊழல் தடுப்பு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதையடுத்து, நீதிபதி சிவராஜன் குழு சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கையின் நகலை தனக்கு வழங்குமாறு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உம்மன் சாண்டி விண்ணப்பத்தார்.
எனினும், அந்த அறிக்கையின் நகல் அவருக்கு வழங்கப்படாததையடுத்து, அதனை வழங்க வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயனுக்கு உம்மன் சாண்டி திங்கள்கிழமை கடிதம் எழுதினார்.
எனினும், அந்த விசாரணை அறிக்கையை சட்டப் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக அதன் நகலை வழங்க முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கண்ணூரில் உம்மன் சாண்டி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சூரிய மின் தகடு ஊழல் குறித்து நீதிபதி சிவராஜன் விசாரணை அறிக்கையின் நகல் எங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அந்த அறிக்கையில் எங்களுக்கு சாதகமான அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்து நாங்கள் அதனைக் கோரவில்லை. எந்த சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில் எங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்பதை அறிந்துகொள்ளவே அந்த அறிக்கையின் நகலைக் கேட்கிறோம்.
எங்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு விசாரணையை மேற்கொள்ள, கேரள அரசு எந்த முகாந்திரத்தில் உத்தரவிட்டது என்பதை அறிந்துகொள்ள நீதிபதி சிவராஜன் அறிக்கையின் நகல் எங்களுக்குத் தேவைப்படுகிறது. அதை வழங்க கேரள அரசு மறுத்து வருவதால், இதுதொடர்பாக சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.
நீதிபதி சிவராஜன் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே, அதன் விவரங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ஹம்ஸாவுக்குக் கசியவிடப்பட்டது என்றார் உம்மன் சாண்டி.
முன்னதாக, நீதிபதி சிவராஜன் அறிக்கையை வழங்க மறுப்பதன் மூலம், ஆளும் இடதுசாரி முன்னணி தனக்கு அடிப்படை நீதியை மறுத்து வருவதாக உம்மன் சாண்டி குற்றம் சாட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com