தனியார் துறையில் இட ஒதுக்கீடு கூடாது: நீதி ஆயோக் துணைத் தலைவர்

தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்று நீதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது என்று நீதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் அண்மையில் வலியுறுத்தியிருந்தார். ஏற்கெனவே, கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை தனியார் துறைக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு கோரியிருந்தார். 
இதே கோரிக்கையை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் சில மாதங்களுக்கு முன் எழுப்பியிருந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இன்றைய பொருளாதார தாராளமயமாக்கல் காலகட்டத்தில் தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிக்கப்படா விட்டால், அது சமூக நீதி என்ற சித்தாந்தத்தை கேலி செய்வதாக ஆகிவிடும்' என்று தெரிவித்திருந்தார். 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நீதி ஆயோக் துணைத் தலைவரிடம் பிடிஐ செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்து அவர் கூறியதாவது:
தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படக் கூடாது. எனினும், வேலைவாய்ப்புகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும். ஆண்டுதோறும் 60 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்குத் தயாராகி வரும் நிலையில், அரசால் 10 முதல் 12 லட்சம் இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை அளிக்க முடிகிறது.
அமைப்புசாரா துறைகளில் பலருக்கும் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. எனினும், அதில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டுவிட்டது. இதனால், அது பற்றி பல்வேறு பிரிவு மக்களிடம் இருந்தும் புகார் எழுந்தது என்றார் அவர்.
அதேபோல், "தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்வது பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அது திறன்வாய்ந்த பணியாளர்களுக்கு பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு முதலீடுகளை ஈர்க்கும் வாய்ப்புகளையும் பாதிக்கும்' என்று பல்வேறு தொழில்துறை அமைப்புகளும் பல ஆண்டுகளாகவே கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com