தேர்தலில் வாக்களிக்க ஆதார்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் யோசனை

தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டுமென்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலில் வாக்களிக்க ஆதார்: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் யோசனை

தேர்தலில் வாக்களிக்க ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக அறிவிக்க வேண்டுமென்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே, அரசின் பல்வேறு மானியங்களைப் பெறுவதற்கு ஆதார் அவசியமாகியுள்ளது. வங்கிக் கணக்கு, பான் கார்டு, சிம் கார்டு ஆகியவற்றுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கவும் ஆதாரை அடையாள ஆவணமாக்க வேண்டுமென்ற கருத்தை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் முன்வைத்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அது இல்லாத பட்சத்தில் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வங்கி கணக்குப் புத்தகம் உள்ளிட்ட அரசு ஆவணங்கள் அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஒரே அடையாள ஆவணம்: இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மேலும் கூறியதாவது:
இப்போது, இந்தியாவில் அரசின் வெவ்வேறு துறைகள் பொதுமக்களுக்கு தனித்தனியான அடையாள அட்டைகளை வழங்கி வருகின்றன. 
இதுபோன்ற அடையாள ஆவணங்கள் அதிகம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையும். எனவே, கூடுதலாக வெவ்வேறு அட்டைகளை வழங்கி குழப்பத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது. அனைத்துத் தேவைகளுக்கும் ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது.
வாக்காளர் அட்டைக்குப் பதில் ஆதார்: நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இப்போது ஆதார் பெற்றுள்ளனர். அடையாள ஆவணம் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் இப்போது ஆதார் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, தேர்தலிலும் அதனை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்.
மேலும், ஆதார் அட்டையையே, வாக்காளர் அடையாள அட்டையாகவும் அறிவித்துவிட்டால் மக்களுக்கு மிகவும் எளிதாகவே இருக்கும். தேர்தலில் வாக்களிக்க அவர்கள் தனியாக வாக்காளர் அட்டையைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. 
அதே நேரத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கான ஆவணமாக ஆதாரை அறிவிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். 2019 அல்லது 2020-ஆம் ஆண்டில் தேர்தலில் வாக்களிக்க அனைவரும் ஆதாரை பயன்படுத்த வேண்டுமென்று அறிவிக்கலாம் என்றார் அவர்.
தவிர்த்திருக்கக் கூடிய கூடிய சர்ச்சை: ஹிமாசலப் பிரதேசத்துக்கு தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே? என்ற கேள்விக்கு, "இது தவிர்த்திருக்கக் கூடிய சர்ச்சைதான். ஹிமாசலப் பிரதேசத் தேர்தலை சில நாள்கள் தள்ளி வைத்து குஜராத் மாநிலத் தேர்தலுடன் சேர்த்து நடத்தியிருக்கலாம். அந்த இருமாநிலத் தேர்தல்களையும் தனித்தனியாக நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதே எனது கருத்து' என்றார்.
தேர்தல் ஆணையம், பற்கள் இல்லாத புலியா?: தேர்தல் கணக்குகளை உரிய நேரத்தில் தாக்கல் செய்யாத அரசியல் கட்சிகளின்அங்கீகாரத்தை ரத்து செய்யாத தேர்தல் ஆணையம், "பற்கள் இல்லாத புலி' என்று பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்தது குறித்தும் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "ஆமாம், கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை என்பது உண்மைதான். ஆணையத்துக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்க அதிகாரம் உள்ள தேர்தல் ஆணையத்துக்கு, சில சூழ்நிலைகளில் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் அதிகாரத்தையும் அளிக்க வேண்டும். இதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்' என்று அவர் பதிலளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com