பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: எஸ்.ஜெய்பால் ரெட்டி

பெட்ரோல், டீசல் ஆகியவற்றையும் சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும்
பெட்ரோல், டீசலையும் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: எஸ்.ஜெய்பால் ரெட்டி

பெட்ரோல், டீசல் ஆகியவற்றையும் சரக்கு - சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) வரம்பின்கீழ் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தினார்.
பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூடுதல் வரியை (வாட்) மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் தெரிவித்த கருத்தை அவர் ஆதரித்துள்ளார். இது தொடர்பாக, ஜெய்பால் ரெட்டி ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் மத்திய அரசு தனது சொந்த வரியை அதிகரித்து இந்த எரிபொருள்களின் விலைகளை அதிகரிப்பதன் மூலம், இது தொடர்பான சுமை அல்லது கெட்ட பெயரை மாநிலங்கள் மீது சுமத்தி விடுகிறது. எனவே, பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். இது நுகர்வோருக்கும், பொருளாதாரத்துக்கும் நல்லது.
கச்சா எண்ணெயின் தற்போதைய சர்வதேச விலையை மனதில் கொண்டு பார்க்கையில் பெட்ரோல் விலை நம் நாட்டில் ரூ.40-ஆக இருக்க வேண்டும். கடந்த 2008-இல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 140 அமெரிக்க டாலராக இருந்தது. நான் பெட்ரோலியத் துறை அமைச்சரான பிறகு அதன் விலை 110 டாலராக இருந்தது.
தற்போது பல மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 50 முதல் 54 டாலர் வரை என்ற நிலையில் உள்ளது. இந்த விலை நிலவரமானது இந்தியா போன்ற எண்ணெயை இறக்குமதி செய்யும் நாட்டுக்கு பெரிய வரமாக இருந்தபோதிலும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் நடவடிக்கைகளால் அதுவே சாபமாக மாறியுள்ளது.
மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறைக்கு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமலாக்கம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை ஆகியவற்றால் ஏற்பட்ட இழப்புகள் காரணமாக இருக்கலாம். எனினும், இந்த நிதிப் பற்றாக்குறையை பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் கூடுதல் வரிகள் சரிசெய்துவிட்டன. மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரிகள் மூலம் நுகர்வோரிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடியை வசூலிக்கிறது. அதன்படி கடந்த மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.6 லட்சம் கோடியை அரசு வசூலித்துள்ளது.
உத்தரப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள சுற்றுலா குறித்த கையேட்டில் தாஜ்மஹாலின் படமும், அது குறித்த தகவல்களும் இடம்பெறவில்லை. இந்த விவகாரத்தில் பிரதமர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். தாஜ்மஹால் என்பது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகும். 
கலாசாரத்துக்கும், மதத்துக்கும் சம்பந்தமில்லை. இந்த விவகாரத்தில் அடிப்படை ஆதாரமற்ற கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அது குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும். மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதுதான் பாஜகவின் செயல்திட்டம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com