ராஜ்நாத் சிங் வருகையின்போது விடுப்பில் சென்ற 250 போலீஸார்

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு திங்கள்கிழமை சென்றிருந்தபோது அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டிய 250 போலீஸார் திடீரென்று விடுப்பில் சென்று விட்டனர்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு திங்கள்கிழமை சென்றிருந்தபோது அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டிய 250 போலீஸார் திடீரென்று விடுப்பில் சென்று விட்டனர்.
ஐ.பி. உளவு அமைப்பின் பயிற்சி மையத்தைத் தொடங்கி வைப்பதற்காக ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை ஜோத்பூருக்கு சென்றார். அப்போது அவருக்கு 250 போலீஸாரைக் கொண்டு அணிவகுப்பு மரியாதை அளிக்க மாநில அரசு திட்டமிட்டிருந்தது. எனினும், தங்களது சம்பள விகிதம் மாதத்துக்கு ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ. 19 ஆயிரமாகக் குறைக்கப்படும் என்று வதந்தி பரவியதைத் தொடர்ந்து, அந்த 250 போலீஸாரும் திடீரென்று விடுப்பு எடுத்துச் சென்று விட்டனர். இது குறித்து ஜோத்பூர் நகர காவல்துறை ஆணையர் அசோக் ராத்தோர் கூறியதாவது:
250-க்கும் மேற்பட்ட போலீஸார் திங்கள்கிழமை விடுப்பில் சென்றுவிட்டனர். அவர்களில் சிலர் மத்திய உள்துறை அமைச்சருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்க வேண்டிய குழுவில் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் பணிக்கு வராததால் அவர்களுக்குப் பதிலாக மற்ற போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உரிய விடுமுறை அளிக்கப்படாமல் பணிக்கு வராமல் இருப்பது என்பது ஒழுக்கமீறலாகும். இது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகுக்கும் என்றார் அவர்.
அதேபோல், ராஜஸ்தான் மாநில காவல்துறை கூடுதல் டிஜிபி எம்.எல்.லதாருக்கும் இதேபோன்ற தர்மசங்கடமான நிலை திங்கள்கிழமை ஏற்பட்டது. அவர் ஜோத்பூர் காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு அன்று வருகை தந்தபோது போலீஸார் அணிவகுப்பு மரியாதை அளிக்க மறுத்ததே இதற்குக் காரணமாகும்.
இதனிடையே, ஜெய்ப்பூர் நகர சிவில் லைன்ஸ் மெட்ரோ காவல் நிலையத்தில் பணிமயர்த்தப்பட்டிருந்த 10 போலீஸார் தங்களது சக காவலர்கள் 6 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து தங்கள் தலையை மொட்டையடித்துக் கொண்டனர். 
மேற்கண்ட 6 போலீஸாரும் சம்பளக் குறைப்பு வதந்தியை உண்மை என்று நம்பி போராட்டம் நடத்தியதால் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
எனினும், போலீஸாரின் ஊதிய விகிதம் குறைக்கப்படும் என்ற வதந்தியை ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாம்சந்த் கட்டாரியா மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "போலீஸார் உள்பட அரசு ஊழியர்கள் யாருடைய சம்பளத்தைக் குறைப்பதற்கும் அரசு உத்தரவிடவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com