ராபர்ட் வதேரா தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு: சோனியா காந்தி மௌனம் காப்பது ஏன்?

ராபர்ட் வதேரா மீது எழுந்துள்ள பணப்பரிவர்த்தனை முறைகேடு குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மௌனம் காப்பது ஏன்? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

ராபர்ட் வதேரா மீது எழுந்துள்ள பணப்பரிவர்த்தனை முறைகேடு குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மௌனம் காப்பது ஏன்? என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், பல்வேறு குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரிக்கும் இடையே முறைகேடான வகையில் கோடிக்கணக்கிலான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக ஆங்கில ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ராபர்ட் வதேராவுக்கும், ஆயுதத் தரகர் சஞ்சய் பண்டாரிக்கும் இடையே முறைகேடாக பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. ஊடகங்கள் அனைத்திலும் இந்த முறைகேடு தொடர்பான செய்திகளே இப்போது வலம் வந்து கொண்டிருக்கின்றன.
சஞ்சய் பண்டாரியின் வங்கிக் கணக்கில் வதேரா சார்பில் ரூ.19 கோடிக்கும் அதிகமான பணம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம் எதற்காகச் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. லண்டனில் வதேராவுக்குச் சொந்தமான இல்லத்தை கடந்த 2012-ஆம் ஆண்டு சஞ்சய் பண்டாரி புனரமைத்திருக்கிறார். அதே ஆண்டில், வதேராவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளையும் பண்டாரி முன்பதிவு செய்திருக்கிறார்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சஞ்சய் பண்டாரியுடன் ராபர்ட் வதேராவுக்கு உள்ள தொடர்பு என்ன? இந்தப் பணப்பரிவர்த்தனைகள் எதற்காக நடைபெற்றன? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மௌனமாக இருப்பது ஏன்? எதற்கெடுத்தாலும் சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிடும் ராகுல் காந்தியும் இந்த விவகாரம் தொடர்பாக எதுவும் பேசவில்லை. இவர்களின் மௌனத்தைப் பார்க்கும்போது, வதேரா மீதான குற்றச்சாட்டை அவர்களே ஒப்புக்கொள்வது போல் உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் விசாரணை மேற்கொள்ளப்படும். தலைமறைவாகி இருக்கும் சஞ்சய் பண்டாரியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்றார் நிர்மலா சீதாராமன்.
விசாரணைக்குத் தயார் - காங்கிரஸ்: ராபர்ட் வதேரா மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, ராபர்ட் வதேராவைக் குறிவைத்து பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டன. அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், எந்த வழக்கிலும் வதேரா குற்றவாளி என்று அவர்களால் (பாஜக) நிரூபிக்க முடியவில்லை. தற்போது பாஜக கூறி வரும் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விசாரணைக்கு வேண்டுமானாலும் அரசு உத்தரவிடட்டும். அதனை எதிர்கொள்ள வதேரா தயாராக உள்ளார் என்றார் சுர்ஜிவாலா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com