வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு எதிரொலி: திட்டப் பணிகளுக்கான செலவை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில்

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய பிரச்னையாக உருவெடுத்து வரும் நிலையில், அதனை சரி செய்வதற்காக திட்டப் பணிகளுக்கான செலவை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவைச் சந்தித்துள்ள நிலையில் இளைஞர்களுக்காக புதிய வேலைவாய்ப்புகள் தேவைக்கு ஏற்ப அதிகரிக்காதது நாட்டில் பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. எனவே, நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான செலவுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி வருகிறது.
அமைச்சகங்களுக்கு உத்தரவு: வேளாண்மைத் துறை, நீர் வளம், கிராமப்புற மேம்பாடு, பஞ்சாயத்து அமைப்பு, நகர்ப்புற வளர்ச்சித் துறை ஆகிய அமைச்சகங்களுக்கும் இது தொடர்பாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அதில், அமைச்சகங்களின்கீழ் நடைபெறும் திட்டங்களில் ஏழை, எளிய மக்கள் அனைவரும் சமமான அளவில், உரிய பயன்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தைப் பொருத்த வரையில், வேலைவாய்ப்புக்கான தொழில் பயற்சிகளை அளிப்பது மட்டுமல்லாது, தொழில்முனைவோர்களை உருவாக்குவதிலும், வேலைவாய்ப்பை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்: 2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டம், அனைத்துத் துறைகளிலும் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதத்துக்கு உயர்த்துவதை இலக்காகக் கொண்டதாகும். 
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத் துறை சார்பில் அனைத்து அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. பிரதமர்அலுவலகம், அமைச்சரவைச் செயலரின் ஒப்புதலுடன் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், நிதித் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ள திட்ட முன்மொழிவுகளுக்கு, விரைந்து ஒப்புதல் பெற சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி ரூ.1000 கோடி அல்லது அதற்கு குறைவான மதிப்புடைய திட்டப் பணிகளுக்கு அக்டோபர் 31-ஆம் தேதிக்குள்ளும், ரூ.1000 கோடிக்கு அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு நவம்பர் 30-ஆம் தேதிக்குள்ளும், ரூ.500 கோடி அதற்குக் குறைவான மதிப்புடைய மேம்பாட்டுத் திட்டப் பணிகளுக்கு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள்ளும் ஒப்புதல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காக ரூ.21,272 கோடி செலவில் தொடங்கப்பட்ட தூய்மை கங்கை திட்டத்துக்கான பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
வாழ்க்கையிலும் வளர்ச்சி: நாட்டில் அனைத்து நிலைகளிலும் வறுமையை ஒழிப்பது, அனைவருக்கும் கெளரவமான, உபயோகமான வேலைவாய்ப்பை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்ய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்க அனைத்துத் துறைகளுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதும் 12-ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அடித்தட்டு மக்களிடையே நிலவி வரும் வறுமையின் அடிப்படை காரணங்களைக் கண்டறிந்து அவற்றை அகற்றுவது மட்டுமின்றி, அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கையை அளிக்க வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் அடித்தட்டு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதையும் மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com