ஹரியாணா வன்முறை: ராம் ரஹீமுக்குச் சொந்தமான நிறுவனத்தின் தலைவர் கைது

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஹரியாணாவில் நடத்திய வன்முறையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தேரா சச்சா

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் ஹரியாணாவில் நடத்திய வன்முறையில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தேரா சச்சா செளதா அமைப்பின் வர்த்தக நிறுவனத் தலைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் எனக் கூறப்படும் ஹனிப்ரீத் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த பெண்ணையும், அவரது மகனையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவராக உள்ள குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகாரை அவரது ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண் முன்வைத்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்து 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதன் தொடர்ச்சியாக, ராம் ரஹீமின் ஆதரவாளர்கள் பஞ்சாபிலும், ஹரியாணாவில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஹரியாணாவில் மட்டும் 41 பேர் கொல்லப்பட்டனர்.
இதில் அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் சிங்குக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். இதற்கு நடுவே தேரா சச்சா செளதா அமைப்பின் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனமான எம்எஸ்ஜி டிரேடிங் லிமிடெடின் தலைவர் சி.பி. அரோராவுக்கும் இந்த வன்முறையில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், பஞ்ச்குலா பகுதியில் அவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அரோராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எம்எஸ்ஜி டிரேடிங் நிறுவனத்தின் சொத்து மதிப்புகள் குறுகில காலத்துக்குள்ளேயே பல மடங்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 151 வகையான உணவுப் பொருள்களை அந்நிறுவனம் புதிதாகச் சந்தைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஹனிப்ரீத் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஹரியாணாவின் பதிண்டா பகுதியைச் சேர்ந்த ஷரண்ஜித் கெளரையும், அவரது மகன் குர்மீத் சிங்கையும் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com