ஹிமாசல் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது.
தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் யார் என்பது இறுதி செய்யப்படவுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளரும், ஹிமாசலப் பிரதேச காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளருமான சுஷில் குமார் ஷிண்டே, ஹிமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், மாநில காங்கிரஸ் தலைவர் சுக்வீந்தர் சிங் சுஹாக் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.
ஹிமாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடவுள்ளது. இதில் முதல் கட்டமாக 42 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் மாநிலத் தேர்தல் குழு அளித்துள்ளது. மத்திய தேர்தல் குழு, இதனை ஆய்வு செய்து வேட்பாளர்களை முடிவு செய்ய இருக்கிறது.
தொகுதி மாறுகிறார் முதல்வர்?: முதல்வர் வீரபத்ர சிங் போட்டியிட்ட சிம்லா (ஊரகம்) தொகுதியில் அவரது மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவார் என்று தெரிகிறது. அவர் மாநில இளைஞரணித் தலைவராகவும் உள்ளார். தியோங் அல்லது ஆர்கி தொகுதியில் வீரபத்ர சிங் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிமாசலப் பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்மாநிலத்தில் வாக்களித்ததை உறுதி செய்வதற்கான ஒப்புகைச் சீட்டு முதல்முறையாக வழங்கப்படவுள்ளது. மொத்தம் 49 லட்சத்து 13 ஆயிரத்து 888 பேர் வாக்களிக்க இருக்கின்றனர். ஹிமாசலப் பிரதேசத்தில் பல ஆண்டுகளாக காங்கிரஸூம், பாஜகவும் மாறிமாறி ஆட்சியைப் பிடித்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com