குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு மாநில அரசு சிறப்பு சலுகை

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு அந்த மாநில பாஜக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அரசு ஊழியர்கள், பொதுமக்களுக்கு அந்த மாநில பாஜக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.
முன்னதாக, ஹிமாசலப் பிரதேச பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. தேர்தல் தேதியை அறிவித்தால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மத்திய, மாநில அரசுகள் மக்களைக் கவர புதிய திட்டங்களை அமல்படுத்த முடியாது. இதனால்தான் குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்காமல் விட்டுவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இப்போது அது சரி என்பதுபோல பல்வேறு புதிய சலுகை அறிவிப்புகளை குஜராத் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
காந்தி நகரில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியதாவது:
மாநில முழுவதும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது ஊதியம் கணிசமாக உயரும். அப்பள்ளிகளில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
மாநிலத்தில் உள்ள 105 நகராட்சிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்கப்படும். இதன் மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். மாநில அரசு சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இலவச மருத்துவக் காப்பீட்டை பெறுவதற்கான ஊதிய வரம்பு ரூ1.5 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் மேலும் பல லட்சம் மக்கள் இலவசமாக ரூ.2 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டைப் பெற முடியும் என்றார் அவர்.
முன்னதாக, ஹிமாசலப் பிரதேச தேர்தல் அறிவிப்புடன், குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவிக்காததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்தது.
அந்த மனுவில், குஜராத், ஹிமாசலப் பிரதேச தேர்தல் தேதிகளை கடந்த இரு தேர்தல்களின்போதும் ஒரே சமயத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், இந்த முறை குஜராத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்தில் தேர்தல் தேதியை ஆணையம் அறிவிக்கவில்லை. இதன் மூலம் குஜராத் மாநில பாஜக அரசு, தேர்தலைக் கருத்தில் கொண்டு பல திட்டங்களை மக்களுக்கு அறிவிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com