கைதி சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு சுற்றுலா!

கோயம்புத்தூரில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தில்லி திகார் சிறையில் உள்ள விசாரணைக் கைதி சுகேஷ் சந்திரசேகர், பெங்களூரில் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சுதந்திரமாக சுற்றி வந்ததும்
கைதி சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு சுற்றுலா!

கோயம்புத்தூரில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட தில்லி திகார் சிறையில் உள்ள விசாரணைக் கைதி சுகேஷ் சந்திரசேகர், பெங்களூரில் காவல் துறையினரின் ஒத்துழைப்புடன் சுதந்திரமாக சுற்றி வந்ததும், கடைகளுக்குச் சென்று விலை உயர்ந்த பொருள்கள் வாங்கியதும், தோழியுடன் நேரத்தைச் செலவிட்டுள்ளதும் வருமான வரித் துறையினர் தில்லி காவல் துறை ஆணையரிடம் அளித்துள்ள அறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் டி.டி.வி. தினகரனுக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயற்சித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் சுகேஷ் சந்திரசேகர்.
கார் தரகரான இவர், வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சொகுசு கார்களை பல்வேறு முக்கியஸ்தர்களுக்கு விற்பனை செய்து வந்தார். அவர் மீது நாடு முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சமீபத்திய வழக்கு, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தைப் பெற்றுத் தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது தில்லி போலீஸார் பதிவு செய்த வழக்காகும். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவர் தில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
விசாரணைக் கைதியான அவரை கோயம்புத்தூரில் உள்ள விசாரணை நீதிமன்றத்தின் முன் கடந்த 12-ஆம் தேதி ஆஜர்படுத்துவதற்காக 7 பேர் அடங்கிய தில்லி போலீஸ் குழு பெங்களூருக்கு கடந்த 9-ஆம் தேதி அழைத்து வந்தது. அப்போது போலீஸாரின் ஒத்துழைப்புடன் சுகேஷ், பெங்களூருவில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்ததாக வருமான வரித்துறை, தில்லி காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபர் 9, 10 ஆகிய தேதிகளில் தனது பாதுகாப்புக்கு வந்த போலீஸாரின் ஒத்துழைப்புடன் பெங்களூரில் சுதந்திரமாக உலா வந்த சுகேஷ் சந்திரசேகர், பெரிய வணிக வளாகங்களுக்குச் சென்று விலை உயர்ந்த பொருள்களை வாங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல், தனது தோழி லீனா மரியாபாலுடன் நேரத்தை செலவிட்டுள்ளார். 3 சொகுசு கார்களையும் அவர் வாங்கியுள்ளார். இதுதொடர்பாக, கோவை மற்றும் சென்னையில் உள்ள கார் தரகர்களிடம் அவர் பேரம் நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
கார் வாங்கி விற்பதை ஒரு தொழிலாகக் கொண்ட சுகேஷ் சந்திரசேகர், வெளிநாட்டு சொகுசு கார்களை இந்தியாவுக்குக் கடத்திவந்து இங்குள்ள பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்கு விற்று வந்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக ஏற்கெனவே அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் நடவடிக்கைகள் தொடர்பாக திரட்டப்பட்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில், பெங்களூருவின் விட்டல் மால்யா சாலையில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வருமான வரித் துறை சார்பில் கடந்த 11-ஆம் தேதி அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது. 
அதேபோல் பெங்களூரை அடுத்த நகர்பாவி கிராமத்தில் சுகேஷ் குடும்பத்துக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு விலை மதிப்புமிக்க பொருள்களும், சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு பென்ட்லி கார், ஆண்டீமர்ஸ் பிக்னெட் கடிகாரம், ரோலக்ஸ் கார்டு ஹோல்டர் உள்ளிட்டவையும் அவற்றில் அடங்கும்.
அதற்கு முந்தைய இரு தினங்களில் சுகேஷ் வாங்கியதாகக் கருதப்படும் ஜாகுவார் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய சொகுசு கார்களையும் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுகேஷை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்ற தில்லி போலீஸ் குழுவின் தலைவரான தலைமைக் காவலர் ஜீவன் சந்தர் இதுதொடர்பாகக் கூறுகையில், "சுகேஷுடன் நாங்கள் கடந்த 11-ஆம் தேதி காலை 7 மணிக்குதான் பெங்களூரை வந்தடைந்தோம். குற்றம்சாட்டப்பட்ட நபரான அவருடன் பெங்களூருவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.எஸ்.ஆர்.) ரயில் நிலையத்தில் மாலை வரை தங்கியிருந்தோம். மாலையில் அங்கிருந்து புறப்பட்டு, அருகில் உள்ள மால்யா சாலை அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சுகேஷுடன் சென்றோம். அப்போதுதான் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது' என்று தெரிவித்தார்.
ஆனால், வருமான வரித் துறையின் சோதனையின்போது, சுகேஷ் அளித்த வாக்குமூலம் வேறு விதமாக, உண்மையை ஒப்புக் கொள்ளும் வகையில் இருந்தது. அதாவது, "பெங்களூருவுக்கு நாங்கள் கடந்த 9-ஆம் தேதியே வந்து விட்டோம். என்னுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் 2 போலீஸார் மட்டுமே தங்கினர். மற்றவர்கள் பெங்களூரு செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கினர். நான் பெங்களூருவில் கடைகளுக்குச் சென்று விரும்பிய பொருள்களை வாங்குவதற்கு தில்லி காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேஷ் எனக்கு அனுமதியளித்தார்' என்று சுகேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புக்கு சுகேஷ் சுதந்திரமாக வந்து செல்வதை அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் உறுதிப்படுத்துகின்றன. அங்கு அவருடன் ஒரு காவல்துறையினர் கூட இல்லை என்பதும் தெள்ளத் தெளிவாகிறது. 
அதேபோல் செயின்ட் மார்க்ஸ் சாலையில் உள்ள சொகுசு ஹோட்டலில் இருந்த ஆவணங்கள், சுகேஷுடன் வந்த காவலர்கள் அங்கு அவருடன் தங்காமல் தனியாகத் தங்கியிருந்ததை உறுதிப்படுத்தின.
"இவை அனைத்தும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளன. எனவே, உரிய நடவடிக்கைக்காக இதை தங்களின் (தில்லி காவல்துறை ஆணையர்) கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்' என்று வருமான வரித்துறையினர் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சுகேஷ்?

பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர், 10-ஆம் வகுப்பு வரை படித்தவர். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரிடம் ரூ.12 கோடி மோசடி செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர். 
கடந்த 2003-இல், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்று கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டார். 2010-இல் இருவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மலையாள திரைப்பட நடிகை லீனாவுக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தருவதாகக் கூறி முறைகேடு செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.19 கோடி சென்னை பொதுத்துறை வங்கியில் மோசடி செய்தது, கர்நாடகத்தில் ஆணுறை விற்பனை ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி 
ரூ. 65 லட்சம் மோசடி, சொகுசு கார்கள் வாங்குவது, திருட்டு வழக்குகள் என தென் மாநிலங்களில் சுகேஷ் மீது சுமார் 50 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கைது பின்னணி

"இரட்டை இலை' சின்னத்தை சசிகலா தரப்புக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர இடைத்தரகராக செயல்பட்டதாக, சுகேஷ் சந்திரசேகரை தில்லி காவல்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் அதிமுக (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மூலம் ரூ.1.30 கோடி தனக்கு வழங்கப்பட்டதாக அவர் விசாரணையில் தெரிவித்தது சர்ச்சைக்கு வித்திட்டது. 
அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து அதன் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது. அச்சின்னத்தை சசிகலா தரப்புக்கு ஒதுக்குவதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தருவதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் சிலருடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தில்லி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்த போலீஸார், சுகேஷை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்தனர்.
அப்போது, அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.30 கோடி ரொக்கம், பல்வேறு முக்கிய ஆவணங்கள், 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ஒரு காரில் தன்னை எம்.பி. ஆக அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் நாடாளுமன்ற நுழைவு பாஸ் ஒட்டப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com