ஜிஎஸ்டி-யில் சிறு தொழில்களுக்கு கூடுதல் சலுகைகள்:ஆர்எஸ்எஸ் சார்பு தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சிறு தொழில்கள், சிறு வர்த்தகர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் சார்பு தொழிலகக் கூட்டமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஜிஎஸ்டி-யில் சிறு தொழில்களுக்கு கூடுதல் சலுகைகள்:ஆர்எஸ்எஸ் சார்பு தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) சிறு தொழில்கள், சிறு வர்த்தகர்களுக்கு கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டுமென்று ஆர்எஸ்எஸ் சார்பு தொழிலகக் கூட்டமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் இந்தக் கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் சார்பு சிறு தொழில் நிறுவனங்களின் சங்கமான "லகு உத்யோக் பாரதி'யின் தலைவர் ஓம் பிரகாஷ் மிட்டல் கூறியதாவது:
மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் வர்த்தகம், தொகுப்பு முறைத் திட்டத்தின்கீழ் கொண்டு வரப்படாதது சிறு தொழில் நடத்துவோருக்கு பெரிய பிரச்னையாக உள்ளது என்று மத்திய அரசிடம் தெளிவுபடுத்தியுள்ளோம். இப்போதுள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தின் மோரினா பகுதியைச் சேர்ந்த சிறு வியாபாரியோ அல்லது சிறு தொழிற்சாலை நடத்துபவரோ, ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கோரினால், தங்கள் ஊரில் இருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள ராஜஸ்தானின் தோல்பூரில் தங்கள் பொருள்களை விற்க முடியாத நிலை உள்ளது.
ராஜஸ்தானின் சுருவில் இருந்து அருகேயுள்ள ஹரியாணா மாநிலம் சிர்சாவில் பொருள்களை விற்க முயலும் சிறு உற்பத்தியாளரும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறார். எனவே, மாநிலங்களுக்கு இடையே பொருள்களை விற்பவர்களைத் தொகுப்பு முறைத் திட்டத்தில் சேர்ப்பதில் உள்ள பிரச்னையை மத்திய அரசு தீர்க்கும் என்று நம்புகிறேன்.
இது தவிர, ஒரே பொருளைத் தயாரிக்கும் சிறு தொழில்முனைவோரும், பெரிய நிறுவனமும் ஜிஎஸ்டி-யின் கீழ் சமமாகக் நடத்தப்படும் பிரச்னையையும் மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மத்திய அரசிடம் எடுத்துச் சென்றுள்ளனர். உதாரணமாக, கோத்ரெஜ் நிறுவனம் பூட்டுகளைத் தயாரிக்கிறது. அதேபோல அலிகர் நகரில் ஏராளமான சிறு தொழிலாளர்களும் பூட்டுகளைத் தயாரிக்கின்றனர். கோத்ரேஜ் நிறுவனம் புதிதாக இரும்பு வாங்கிப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் சிறு தொழிலாளர்கள் பழைய இரும்பை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஜிஎஸ்டி-யில் இருவருக்குமே 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இது நியாயமற்றது. 
எனவே, இதுபோன்ற நிலையில் உள்ள சிறு உற்பத்தியாளர்களுக்கும், வர்த்தகர்களுக்கும் உரிய தள்ளுபடி அளிக்க வேண்டும். மேலும், ஒப்பந்த அடிப்படையில் சிறு பணிகளைச் செய்து கொடுக்கும் தொழிலாளர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம் என்றார் மிட்டல்.
இந்த விவகாரம் தொடர்பாக பாஜக துணைத் தலைவர் வினய் சகஸ்ரபுத்தே, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, பியூஷ் கோயல் ஆகியோரை ஆர்எஸ்எஸ் சார்பு தொழில் நிறுவனங்களின் சங்கத் தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ரூ.3 கோடி வரை ஆண்டு வருமானம் ஈட்டும் தொழில், வர்த்தக நிறுவனங்கள் தொகுப்புமுறைத் திட்டத்தில் சேரலாம் என்ற சலுகையும், மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் நடத்தும் தொழில் நிறுவனங்களின் ஆண்டு வருமானம் ரூ.3 கோடி வரை இருந்தால் அவர்களும் தொகுப்பு முறைத் திட்டத்தில் இணையலாம் என்ற அறிவிப்பும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொகுப்பு முறைத் திட்டத்தில் இணையும் நிருவனங்கள் காலாண்டுக்கு ஒருமுறை வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் 1 முதல் 5 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com