துணை ராணுவத்தினர் மாநில போலீஸாருக்கு மாற்று அல்ல: மத்திய அரசு

துணை ராணுவப் படையினரை உள்ளூர் போலீஸாருக்கு மாற்றாக மாநிலங்கள் கருதக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துணை ராணுவப் படையினரை உள்ளூர் போலீஸாருக்கு மாற்றாக மாநிலங்கள் கருதக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டார்ஜீலிங்கில் நடைபெற்ற கோர்க்கா போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டிருந்த துணை ராணுவத்தினரை மத்திய அரசு திரும்ப அழைப்பதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், உள்துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநிலங்களில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கான கோரிக்கையை மிகவும் நெருக்கடியான நேரங்களில் மட்டுமே மாநில அரசு விடுக்க வேண்டும். தங்களது போலீஸார் மற்றும் ஆயுதப் படையினர் மூலம் தீர்த்துக் கொள்ளக் கூடிய பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கூட, மத்திய அரசின் துணை ராணுவப் படைகளை அழைப்பதை மாநிலங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும், தங்கள் மாநிலங்களில் நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படையினரை திரும்ப அனுப்பவும் சில மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கின்றன.
எல்லைப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற மிகத் தீவிரமான தேவைகளுக்காக மட்டுமே துணை ராணுவம் அழைக்கப்பட வேண்டும்.
மாநில போலீஸாருக்கு மாற்றாக, சாதாரண பணிகளுக்காக அவர்களைப் பயன்படுத்தக் கூடாது. மாநிலங்களில் அதுவரை இல்லாத அளவுக்கு சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய நெருக்கடி காலகட்டத்தில்தான் துணை ராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும். இதற்காக, மாநில காவல்துறையின் சட்டம் - ஒழுங்குப் பிரிவின் தலைவரது தலைமையிலான குழு ஒன்றை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப்பகுதியை "கோர்க்காலாந்து' என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, அங்கு கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன.
அப்போது வன்முறையைக் கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) உள்ளிட்ட துணை ராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். தற்போது பதற்றம் தணிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ள நிலையில், துணை ராணுவ வீரர்களை திரும்ப அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
எனினும், அதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு 
தெரிவித்தது. அதையடுத்து, இந்த விவகாரத்தை கொல்கத்தா நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றுள்ள அமைச்சகம், மாநிலங்களுக்கு இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com