நிர்வாகரீதியாக மோடியுடன் கொண்டிருந்த உறவை வெளியிட விரும்பவில்லை

குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரதமர் மோடியுடன் நிர்வாகரீதியாக கொண்டிருந்த உறவு எத்தகையது என்பதை பகிரங்கமாகக் கூற முடியாது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
நிர்வாகரீதியாக மோடியுடன் கொண்டிருந்த உறவை வெளியிட விரும்பவில்லை

குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரதமர் மோடியுடன் நிர்வாகரீதியாக கொண்டிருந்த உறவு எத்தகையது என்பதை பகிரங்கமாகக் கூற முடியாது என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். அடுத்து தாம் எழுதப் போகும் புத்தகத்திலும் இதுதொடர்பாக எதுவும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் பதவிக்கு தம்மை விடத் தகுதியானவர் மன்மோகன் சிங்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை எனவும் பிரணாப் முகர்ஜி உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
எனது நீண்ட, நெடிய அரசியல் பயணத்தில் வெவ்வேறு வகையான அனுபவங்கள் கிடைத்துள்ளன. பொது வாழ்வில் இருந்தபோது மறக்க முடியாத தருணம் என்றால், நாடாளுன்றத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை ஒன்றைக் குறிப்பிட முடியும். பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்றதற்குப் பிறகு வங்கதேசத்தை தனிநாடாக அவர் அறிவித்தார்.
இந்திய படைகளிடம் பாகிஸ்தான் சரணடைந்ததாகவும், வங்கதேசம் இனி ஒரு சுதந்திர தேசம் என்றும் இந்திரா காந்தி கூறிய வார்த்தைகள் இன்றளவும் என்னுள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. வங்கதேச விடுதலையை முன்னிறுத்தி பாகிஸ்தானுடனான போர் அறிவிப்பை அவர் வெளியிட்டார். சர்வதேச நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் தீர்க்கமான முடிவை அவர் எடுத்தார். ஒருவேளை அவ்வாறு அவர் செயல்படாவிட்டிருந்தால் பல்வேறு குழப்பங்களுக்கு அது வழிவகுத்திருக்கும். ஏனெனில் வங்கதேச விடுதலையை அமெரிக்கா விரும்பவில்லை. சோவியத் ரஷியாவும் போரை நீட்டிக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. எனவேதான், இந்திரா காந்தி தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தார்.
பிரதமர் பொறுப்பு: கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றபோது என்னை ஏன் சோனியா காந்தி பிரதமராக்கவில்லை என்று கேள்வி எழுப்பப்படுகிறது. உண்மையைச் சொல்வதென்றால், அப்பதவிக்கு என்னை விட மன்மோகன் சிங்கே சாலப் பொருத்தமானவர். எனக்கு ஹிந்தி மொழி சரளமாக பேசத் தெரியாது. பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியின் வழியாக அவர்களைத் தொடர்பு கொள்ள இயலாத ஒருவர் பிரதமராக இருக்க முடியாது. அதைவைத்து பார்க்கும்போது, மன்மோகன் சிங்தான் அப்பொறுப்புக்குத் தகுதியானவர்.
பிரதமருடனான உறவு: குடியரசுத் தலைவராக இருந்தபோது பிரதமர் மோடியுடன் நான் கொண்டிருந்த நிர்வாகரீதியான உறவு எத்தகையது என்பதை வெளிப்படையாகக் கூற முடியாது. 
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கே தலையிடுவதற்கான உரிமை இல்லை. மேலும், இதுதொடர்பாக எனது அடுத்த புத்தகத்திலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை.
எப்படியாயினும், மோடி தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக இருப்பவர். எனவே, குடியரசுத் தலைவர் என்ற முறையில் அவருடன் சிறப்பானதொரு உறவையே கொண்டிருந்தேன்.
காங்கிரஸ் ஆலோசகர்?: குடியரசுத் தலைவர் பதவியை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு நான் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று மணிசங்கர் ஐயர் கடிதம் எழுதியுள்ளார். நாட்டின் உயரிய பதவியை வகித்த எவருமே அதற்கு பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அது முறையும் அல்ல. அதேவேளையில் சில ஆலோசனைகளை வேண்டுமானால் வழங்கலாம் என்றார் பிரணாப் முகர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com