ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் அறிவித்துள்ளன.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான பாஜகவும் அறிவித்துள்ளன.
மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துவிட்டது. ஆனால், முதல் கட்டமாக 59 தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் வீரபத்ர சிங், அர்கி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் முன்பு சிம்லா (ஊரகம்) தொகுதியில் போட்டியிட்டார்.
பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த தேர்தலில் அவர் ஹமீர்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.
மூத்த தலைவர்களுக்கு வாய்ப்பு: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற மத்திய தேர்தல் குழு இறுதி செய்தது. முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சிம்லா (ஊரகம்) தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. விக்ரமாதித்யா சிங்கின் பெயரும் முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த தேர்தலில் தோல்வியடைந்த மாநில காங்கிரஸ் தலைவர் சுக்வீந்தர் சிங்குக்கு நாதௌன் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் 12 புதுமுகங்கள்: பாஜகவைப் பொறுத்தவரையில் 12 புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே எண்ணிக்கையில் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியலில் 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த முறை 7 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றால் இருமுறை முதல்வராக இருந்துள்ள பிரேம் குமார் துமல், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஆகிய இருவரில் ஒருவர் முதல்வராக வாய்ப்பு அதிகமுள்ளது. கடந் தேர்தலில் ஹமீர்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற துமல் இந்த முறை சுஜான்பூரில் போட்டியிடுகிறார்.
அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்ராமின் மகன் அனில் சர்மாவுக்கு மண்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போது எம்எல்ஏக்களாக உள்ள 4 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் வீரபத்ர சிங்கின் மனைவியின் சகோதரர் வீர்விக்ரம் சென், அவரது மனைவி விஜய் ஜோதி சென் ஆகியோர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். 
அவர்களில் விஜய் ஜோதி சென்னுக்கு பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் இருந்து பாஜகவுக்கு மாறிய மூத்த தலைவர் பவன் நய்யாருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாஜக அறிமுகப்படுத்தியுள்ள புது முகங்களில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜே.ஆர்.கத்வாலும் ஒருவராவார்.
ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com