ஹிமாசலப் பேரவைத் தேர்தல்: வீரபத்ர சிங் இன்று வேட்புமனு தாக்கல்

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங், வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
ஹிமாசலப் பேரவைத் தேர்தல்: வீரபத்ர சிங் இன்று வேட்புமனு தாக்கல்

ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அந்த மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான வீரபத்ர சிங், வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
68 உறுப்பினர்களைக் கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைக்கு, அடுத்த மாதம் (நவம்பர்) 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் வீரபத்ர சிங் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 83 வயதாகும் இவர், ஏற்கெனவே 6 முறை இப்பதவியை வகித்தவர்.
சிம்லா புறநகர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினரான இவர், இந்த முறை சோலன் மாவட்டத்தில் உள்ள அர்கி தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முதல்வர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள பிரேம் குமார் துமல், ஹமீர்புர் மாவட்டத்தில் உள்ள சுஜான்பூர் பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
இவ்விரு தொகுதிகளிலும், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலின்போது பாஜக வெற்றி பெற்றது.
இந்நிலையில், அர்கி தொகுதியில் வித்யா ஸ்டோக்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சென்று வீரபத்ர சிங், வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்கிறார். பின்னர், அங்கிருந்து அவர் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். வீரபத்ர சிங்கை எதிர்த்து, பாஜக சார்பில் ரத்தன் சிங் பால் போட்டியிடுகிறார்.
இதனிடையே, பிரேம் குமார் துமல், சுஜான்பூர் தொகுதியில், வரும் 23-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அந்தத் தொகுதியில் 2 நாள்களுக்கு முன்பே அவர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார்.
பிரேம் குமாரின் துமலின் ஹமீர்பூர் தொகுதியில், இந்த முறை பாஜக நிர்வாகி நரேந்திர தாக்குர் போட்டியிடுகிறார்.
இதனிடையே, சிம்லா புறநகர் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வீரபத்ர சிங்கின் மகன் விக்கிரமாதித்யா சிங் ஆவலுடன் காத்திருக்கிறார். ஆனால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதில் மர்மம் நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com