கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன.

கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  இரு தேசிய கட்சிகளிடம் போராடி  ஆட்சியைப் பிடிக்க மஜதவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடப்பதற்கு 6 மாத காலம் உள்ள நிலையில்,  மூன்று கட்சிகளும் தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. வேட்பாளர் தேர்வு,  பிரசார வியூகம்,  பிரசாரத்தில் கையில் எடுக்க வேண்டிய பிரச்னை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மூன்று கட்சிகளும் கவனிக்கத் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ்: முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சியைத் தக்கவைக்கத் திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சி,  அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் வழிகாட்டுதலின் பேரில்,  தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால்,  மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் ஆகியோர் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்.15-ஆம் தேதி வரை தொகுதி வாரியாக வீட்டுக்கு வீடு காங்கிரஸ் பிரசார பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினர்,  அடுத்ததாக வாக்குச்சாவடி அளவில் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.  கர்நாடகத்தில் நடந்துவரும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக  நவ.10-ஆம் தேதி முதல் மூன்று நாள்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி,  பெங்களூரில் முகாமிடத் திட்டமிட்டுள்ளார்.  அப்போது, தேர்தல் பணிகளுக்கு புதிய வேகம் கொடுக்கவும் ராகுல் காந்தி முற்படுவார் என்று கூறப்படுகிறது.

பாஜக: வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ள பாஜக,  முதல்வர் சித்தராமையா ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்துகளைக் கட்டமைக்க வியூகம் அமைத்துள்ளது.  மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர்,  பியூஷ் கோயல் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள பாஜக,  அக்.29-ஆம் தேதி பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு எழுச்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.

நவ.1-ஆம் தேதி முதல் புதிய கர்நாடக எழுச்சிப் பயணத்தைத் தொடக்கி வைக்கவிருக்கும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா,  அடுத்தடுத்த நாள்களில் கர்நாடகத்துக்கு வந்து மக்களின் ஆதரவைப் பெற திட்டமிட்டிருக்கிறார்.  எப்படியும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால்,  காங்கிரஸ் மற்றும் மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள 10 முதல் 15 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்கவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகிறது.  காங்கிரஸ் மற்றும் மஜதவில் அதிருப்தி அடைந்து ஒதுங்கியிருக்கும் அனைவரையும் பாஜகவுக்கு ஈர்க்க அக் கட்சி முனைப்பாகச் செயல்பட்டு வருகிறது.

மஜத காங்கிரஸ்,  பாஜக ஆகிய தேசிய கட்சிகளுக்கு எதிராக மாநில பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ள மஜத,  மாநிலக் கட்சியை ஆட்சி அமைக்க ஆசி வழங்க வேண்டும் என்ற பிரசாரத்தை தீவிரப்படுத்தவுள்ளது.  மாநிலக் கட்சிகளால்தான் மாநில பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று பிரசாரம் செய்துவரும் எச்.டி. தேவெ கெளடா,  இதற்காக முன்னாள் முதல்வர் குமாரசாமியை முன்வைத்து பிரசார வியூகம்  அமைத்துள்ளார்.

குறிப்பாக,  வட கர்நாடகத்தில் அதிக கவனம் செலுத்தவிருக்கும குமாரசாமி,  அங்கு அதிக இடங்களைக் கைப்பற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.  நவ.1-ஆம் தேதிமுதல் மாநில சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கும் குமாரசாமி, 224 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய முடிவுசெய்து, அதற்கேற்ப திட்டம் வகுத்துள்ளார்.

தேசிய கட்சிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துள்ள குமாரசாமி, வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களைக் களமிறக்க தகுதியானவர்களையும் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com