தீபாவளி நாளில் 190 தீ விபத்துகள் பதிவு: தீயணைப்புத் துறையினர் தகவல்

தலைநகர் தில்லியில் தீபாவளி நாளில் தீ விபத்துகள் தொடர்பாக 190 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
தீபாவளி நாளில் 190 தீ விபத்துகள் பதிவு: தீயணைப்புத் துறையினர் தகவல்

தலைநகர் தில்லியில் தீபாவளி நாளில் தீ விபத்துகள் தொடர்பாக 190 தொலைபேசி அழைப்புகள் பதிவாகியதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். மேலும்,  கிழக்குத் தில்லியில் துணிக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை இயக்குநர் ஜி.சி. மிஸ்ரா வெள்ளிக்கிழமை கூறியதாவது:
தில்லி மாநகர் தீயணைப்புத் துறைக்கு தீபாவளி நாளில்  204 தொலைபேசி அழைப்புகள் வந்தன.  இவற்றில் 190 தீ விபத்துகள் தொடர்பானவை. 51 அழைப்புகள் பட்டாசு வெடி விபத்துகள் தொடர்பானவை. மற்றவை வீடு இடிந்தது, விலங்கை காப்பாற்ற வேண்டும் போன்றவையாகும்.

மேலும்,  கிழக்கு தில்லி பகுதியில் உள்ள சுபாஷ் மொஹல்லாவில் துணிக் கிடங்கில் வியாழக்கிழமை இரவு 10.10 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்பு வந்தது.  இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 26 தீயணைப்பு வாகனங்கள்உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டன.  இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  மூன்று மாடிகள் கொண்ட அந்த துணிக் கிடங்கில்  தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதன்கிழமை இரவில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு வரை மொத்தம் 204 தொலைபேசி அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வரப்பெற்றன.  கடந்த ஆண்டு தீபாவளியின்போது 243 தொலைபேசி அழைப்புகள் வந்தன.  மேலும்,  தீபாவளி நள்ளிரவுக்குப் பிறகும்கூட  தீ விபத்து தொடர்பான அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன.  தீபாவளி நள்ளிரவுக்குப் பிறகு 75 தொலைபேசி அழைப்புகள் தீயணைப்பு துறைக்கு வரப்பெற்றன.

தலைநகரில் 59 நிரந்தர தீயணைப்பு நிலையங்கள் இருந்தபோதிலும்,  தீபாவளியை ஒட்டி தாற்காலிகமாக 59 இடங்களில் தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  

குறிப்பாக, கடந்த ஆண்டு அதிகமான தீ விபத்து அழைப்புகள் வரப்பெற்ற பகுதிகளில் இந்த தாற்காலிக தீயணைப்பு நிலையங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டிருந்தன.

அதேபோன்று,  தீயணைப்பு கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவி தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.  கடந்த  ஆண்டு தில்லி தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தீபாவளியன்று மாலை 5 மணியில் இருந்து நள்ளிரவு வரை 243 தொலைபேசி அழைப்புகள் வரப்பெற்றன.  நள்ளிரவில் இருந்து அதிகாலை வரை 107 அழைப்புகள் வரப்பெற்றன என்றார் அந்த தீயணைப்பு அதிகாரி.

பட்டாசு விபத்துகள் குறைந்தன
தில்லியில் பட்டாசு விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை  விதித்திருந்த போதிலும், தீபாவளி தினத்தன்று காற்று மாசு அதிகரித்திருந்தது. அதேநேரத்தில் பட்டாசுகளால் ஏற்படும் தீக் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு குறைந்துள்ளது.

வழக்கமாக தீபாவளி தினத்தன்று பட்டாசுகள் ஏற்படும் தீக் காயங்களுக்கு சிகிச்சைப் பெற பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வருவதுண்டு. அதன்படி, மத்திய அரசால் நடத்தப்படும் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளால் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு 66 பேர் சிகிச்சைப் பெற்று சென்றுள்ளனர்.

அதேபோல் ஆர்எம்எல் மருத்துவமனையில் 29 பேர் சிகிச்சைப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த  எண்ணிக்கை 79 ஆக இருந்தது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு வரை பட்டாசுகளால் பாதிக்கப்பட்டு யாரும் வரவில்லை. லோக் நாயக் ஜெயபிரகாஷ் மருத்துவமனையில் 10 பேர் பட்டாசுகளால் ஏற்பட்ட தீக் காயங்களுக்கு சிகிச்சைப் பெற்றுள்ளனர். கங்கா ராம் மருத்துவமனையில் 15 பேர் தீக் காயங்களுக்கு சிசிக்சைப் பெற்றுள்ளனர். ஸ்டீபன் கல்லூரியில் கடந்த ஆண்டு பட்டாசுகளால் ஏற்பட்ட தீக்காயங்களுக்கு 20 பேர் சிகிச்சைப் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு யாரும் வரவில்லை அந்த மருத்துவமனையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com