தாஜ் மஹாலைத் தொடர்ந்து திப்பு சுல்தான் சர்ச்சை!

உத்தரப் பிரதேசத்தில் தாஜ் மஹாலை முன்வைத்து அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துகளால் எழுந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் சர்ச்சை உருவெடுத்துள்ளது.
தாஜ் மஹாலைத் தொடர்ந்து திப்பு சுல்தான் சர்ச்சை!

உத்தரப் பிரதேசத்தில் தாஜ் மஹாலை முன்வைத்து அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துகளால் எழுந்த சர்ச்சைகள் சற்று ஓய்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் சர்ச்சை உருவெடுத்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், சுற்றுலாத் துறை சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டியில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடம்பெறவில்லை. இதற்கு, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 
எனினும், உ.பி. அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்திய பாஜக எம்எம்ஏ சங்கீத் சோம், "தாஜ் மஹால், ஒரு களங்கம்; துரோகிகளால் கட்டப்பட்டது' என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பாஜக தலைவரோ, தாஜ்மஹால், ஓர் அழகிய இடுகாடு என்று கூறினார்.
இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு பதிலடி கொடுத்த சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம் கான், "ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட தில்லி நாடாளுமன்ற கட்டடம், குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவையும் அடிமை சின்னங்கள்தாம்; அவற்றையும் இடித்துவிடலாமா?' என்று கேள்வியெழுப்பினார். 
இதுபோன்ற வாத, பிரதிவாத கருத்துகளால் ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "தாஜ்மஹால், இந்தியர்களின் உழைப்பாலும் வியர்வையாலும் கட்டப்பட்டது. அதனை பாதுகாக்க வேண்டியது, அரசின் பொறுப்பு' என்று தெரிவித்தார்.


புதிய சர்ச்சை

இந்த விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், கர்நாடகத்தில் திப்பு சுல்தான் ஜயந்தி விழாவை முன்வைத்து சர்ச்சைகள் உருவெடுத்துள்ளன.
மைசூரை ஆட்சி செய்த திப்பு சுல்தானின் பிறந்த தினம், கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 3-ஆவது ஆண்டாக நவம்பர் 10-ஆம் தேதி இந்த விழாவை கொண்டாட காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், "ஹிந்துக்களுக்கு எதிரானவர் என்பதால், திப்பு சுல்தானுக்கு அரசு சார்பில் விழா கொண்டாடக் கூடாது' என்று பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினரும் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். எனினும், எதிர்ப்புகளை மீறி திப்பு ஜயந்தியை கொண்டாடும் முனைப்பில் காங்கிரஸ் அரசு உள்ளது.


திப்பு சுல்தான் ஜயந்தி விழா தேதியிலும் (நவ.10) சர்ச்சைகள் நீடித்து வருகின்றன. "திப்பு சுல்தான் பிறந்த தினம் நவம்பர் 20-ஆம் தேதிதான்; ஆனால், மேல்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஐயங்கார்கள் 700 பேரை அவர் தூக்கிலிட்டு கொன்ற தினமான நவம்பர் 10-ஆம் தேதியில் கர்நாடக அரசு விழா கொண்டாடுகிறது. இது, சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் முயற்சி' என்று எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு வன்முறை...: கடந்த ஆண்டு திப்பு ஜயந்தி விழாவைக் கண்டித்து குடகு மாவட்டத்தில் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். 


மத்திய அமைச்சர் கடிதத்தால் பரபரப்பு

உத்தர கன்னடா மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யும், மத்திய திறன் மேம்பாட்டுத் துறை இணையமைச்சருமான அனந்த்குமார் ஹெக்டே, கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கும், உத்தர கன்னடா மாவட்ட துணை ஆணையருக்கும் கடிதமொன்றை எழுதியுள்ளார்.
அதில், திப்பு ஜயந்தி விழாவையொட்டி நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் தன்னை அழைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "கொடூரமான கொலைகள், பெருமளவிலான பலாத்காரங்களில் ஈடுபட்ட ஒருவரை போற்றி புகழும் அவமானகரமான விழாவுக்கு என்னை அழைக்க வேண்டாம் என்று கர்நாடக அரசிடம் கூறிவிட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.


பாஜக எம்.பி. ஆதரவு

அனந்த்குமார் ஹெக்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாஜக எம்.பி. ஷோபா கரந்த்லஜே, தானும் அந்த விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "திப்பு சுல்தான், கன்னடர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரானவர். அவரது பிறந்த தினம் அரசு சார்பில் கொண்டாடப்படுவதற்கு, கன்னடர்களிடம் இருந்து தன்னெழுச்சியாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால், வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு காங்கிரஸ் அரசு செயல்படுகிறது' என்றார்.


கிரீஷ் கர்னாட் கருத்தால் சர்ச்சை: 

2015-ஆம் ஆண்டு திப்பு ஜயந்தி விழாவில் பேசிய ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளரும் நடிகருமான கிரீஷ் கர்னாட், பெங்களூரு கெம்பே கௌடா சர்வதேச விமான நிலையத்துக்கு திப்புவின் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கூறினார். அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் பின்னர் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

அரசியலாக்க வேண்டாம்

திப்பு சுல்தான் ஜயந்தி விழாவை தேவையில்லாமல் அரசியலாக்குவதாக மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே மீது கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: அரசில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில், அனந்த்குமார் ஹெக்டே அப்படியொரு கடிதத்தை எழுதியிருக்கக் கூடாது. திப்பு ஜயந்தி விழாவுக்காக, மத்திய, மாநில தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்படும். அதனை ஏற்பதும், நிராகரிப்பதும் அவர்களது முடிவு. 

ஆங்கிலேயர்களுக்கு எதிராக 4 போர்களில் ஈடுபட்டவர் திப்பு சுல்தான். ஆங்கிலேயருக்கு எதிரான போரில்தான் அவர் உயிரைவிட்டார். அவரது ஜெயந்தி விழாவை அரசியலாக்க வேண்டாம். கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோது, திப்பு சுல்தான் பெயரை பயன்படுத்திக் கொண்ட பாஜக, இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று கேள்வியெழுப்பினார் சித்தராமையா. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com