நிலக்கரி முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தயார்

நிலக்கரி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
நிலக்கரி முறைகேடு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு தயார்

நிலக்கரி முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு தயாராக இருப்பதாக மின்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து புது தில்லியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
கர்நாடக மின்சாரக் கழகம், தனியார் நிறுவனத்தின் சார்பில் மத்திய அரசுக்கு அபராதத் தொகை செலுத்தியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளதோடு, அதுகுறித்து சிபிஐ விசாரணை கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரான எடியூரப்பா, இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் குற்றம்சாட்டியுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எடியூரப்பா கேட்டிருப்பதை வரவேற்கிறோம். சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விவாதத்துக்கும் நான் தயார். 
மத்திய அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டே தனியார் நிறுவனத்துடன் நிலக்கரிக்காக ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாகவே நமது நிலக்கரி தொகுதி ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் மத்திய அமைச்சரை சந்தித்து கர்நாடகத்துக்கு நிலக்கரி தொகுதியை ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தோம்.
இந் நிலையில், நிலக்கரி ஒதுக்கீட்டுக்காக தனியார் நிறுவனத்துடன் ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் கர்நாடக அரசுக்கு இல்லை. ரகசிய ஒப்பந்தம் செய்துகொள்வதெல்லாம் பாஜகவுக்கும், எடியூரப்பாவுக்கும் தான் கைவந்த கலையாகும். 
ஆண்டுதோறும் கூடுதல் தொகையை அளித்து மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து நிலக்கரியை வாங்கி வந்தோம். இதனால் மாநில அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, நிலக்கரி தொகுதி ஒதுக்கீட்டுக்கு கர்நாடக அரசு தகுதிபெற வேண்டுமென்பதற்காகவே கேஇசிஎம்எல் நிறுவனத்துக்கு பணம் ஒதுக்கியிருந்தோம்.
எனவே, மக்களைத் திசைதிருப்புவதற்காக கர்நாடக அரசு மீது பாஜக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தின் நலனைப் பாதுகாக்கவும், இழப்பை ஈடு செய்யவும் நிறுவனத்துக்கு நிதி வழங்கியுள்ளோம். இது மத்திய அரசுக்கும் தெரிந்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார். 
இந்த விவகாரத்தில் தனிப்பட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் எனக்கும் முதல்வர் சித்தராமையாவுக்கும் எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com