புதிய செருப்பு ஆரம்பத்தில் கடிக்கவே செய்யும்: ஜிஎஸ்டிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து

நீங்கள் புதிய செருப்பு வாங்கும்போது, ஆரம்பத்தில் சில நாட்களுக்கு கடிக்கவே செய்யும் பிறகு அணிவதற்கு வசதியாக இருக்கும் என ஜிஎஸ்டிக்கு
புதிய செருப்பு ஆரம்பத்தில் கடிக்கவே செய்யும்: ஜிஎஸ்டிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்து

இந்தூர்: நீங்கள் புதிய செருப்பு வாங்கும்போது, ஆரம்பத்தில் சில நாட்களுக்கு கடிக்கவே செய்யும் பிறகு அணிவதற்கு வசதியாக இருக்கும் என ஜிஎஸ்டிக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

குஜராத்தில் நடந்த பேரணியில் நேற்று உரையாற்றிய ராகுல், மத்தியில் ஆளும் ​​பாஜக அரசின் ஜிஎஸ்டி வரியை "கப்பர் சிங் வரி" என்று கடுமையாக குற்றம்சாட்டியதுடன் புதிய வரி விதிப்பில் மாற்றங்களை எளிதாக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிலையில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நேற்று செவ்வாய்கிழமை மத்தியபிரதேச மாநிலம் இந்தூர் அருகே துதியா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். அப்போது மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவற்றுக்கு எதிரான கருத்துகள் குறித்த கேள்விக்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய காலணிகளை (செருப்பு) வாங்கும்போது, ஆரம்பத்தில் மூன்று நாட்களுக்கு கடிக்கவே செய்யும். பிறகு நான்காவது நாளில் இருந்து அவை அணிவதற்கு வசதியாக இருக்கும். அதுபோல்தான் இதுவும். இந்த நடவடிக்கைகளால், வேலைவாய்ப்பு பறிபோய் விட்டதாக தேவையின்றி ஒரு மாயை உருவாக்கப்படுகிறது.

ஜிஎஸ்டியின் நடைமுறைகளால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் வரி விதிப்பு முறையை எளிதாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஜிஎஸ்டி மற்றும்  இளைஞர்களுக்கு வேலை வழங்கும் விவகாரங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தைப் பற்றி ஒரு தவறான அபிப்ராயம் உருவாக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நாட்டை 3 தலைமுறைகளாக ஆண்டவர்கள், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். ஜிஎஸ்டி.யை ‘கப்பர் சிங் வரி’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பது அவரது அநாகரிக போக்கை காட்டுகிறது என்று கூறினார்.

இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்திய ராகுலுக்கு கடவுள் ஞானத்தை அளிப்பார். 2014 பொதுத் தேர்தலில் மக்கள் அவரை தூசி என தூக்கி எறிந்துவிட்டனர். 
எனவே அவரது மனநிலையை நான் புரிந்து கொள்ள முடியும்," என கூறினார்.

"ராகுல் தனது வருங்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறார், அவருக்கு நல்ல அதிர்ஷ்டம் வேண்டுமென்று நான் விரும்புகிறேன்," என்றார் பிரதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com