சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து விசாரணை கோரிய மனு: சுப்ரமணியன் சுவாமிக்கு சூடு போட்ட நீதிமன்றம்! 

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் குறித்து சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரிய சுப்ரமணியன் சுவாமியின் மனுவினை,  தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி... 
சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து விசாரணை கோரிய மனு: சுப்ரமணியன் சுவாமிக்கு சூடு போட்ட நீதிமன்றம்! 

புதுதில்லி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மர்ம மரணம் குறித்து சிபிஐ சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரிய சுப்ரமணியன் சுவாமியின் மனுவினை,  தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014- ஆம் ஆண்டு தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலின் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். முதலில் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டாலும், பின்னர் அவரது இறப்பில் சந்தேகம் எழுந்தது.

அவரது உடலில் ஊசி குத்திய தடம் இருந்ததாகவும், அளவுக்கு அதிகமாக மருந்து எடுத்துக் கொண்டது மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. விஷம் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இறுதியாக அவர் கொலை செய்யப்பட்டதாக தில்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அப்பொழுது தில்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில் அவர், 'சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு விசாரணையில் தேவையற்ற தாமதம் காட்டப்படுகிறது. இது இந்திய நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல். எனவே, சிபிஐ தலைமையில் பல்வேறு விசாரணை அமைப்புகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு அமைத்து இந்தக் கொலை வழக்கை விசாரிக்க வேண்டும். இந்த விசாரணை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். ஏனெனில், இதில் பல்வேறு அரசியல் குறுக்கீடுகளும் உள்ளதாகத் தெரிகிறது என்று தெரிவித்திருந்தார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு நீதிபதிகள் முரளிதர், மேஹ்தா அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:

நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது சிறப்பு விசாரணைக் குழு விசாரணையில் தவறுகளையோ அரசியல் குறுக்கீடுகளையோ காண இயலவில்லை. சுவாமி எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை சுமத்தினாரோ அத்தகைய விபரங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கவில்லை.தற்பொழுது அது தொடர்பான ஆதாரங்களை தர அவகாசம் கேட்பதன் மூலம் முதல்கட்டத்தில் அவர் அவற்றை மறைத்துள்ளது தெரிய வருகிறது.

சுப்ரமணியன் சுவாமியின் மனுவானது அரசியல் உள்நோக்கத்துடன் ஒரு பொதுநல மனுவினை  எப்படி தாக்கல் செய்வது என்பதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. நீதிமன்றச் செயல்பாடுகளை அரசியல்வாதிகள் தங்களது சுயநலன்களுக்குப் பயன்படுத்த நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது.

எனவே இந்த மனுவினை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், வழக்கில் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ள கருத்துக்களை தாங்கள் ஏற்கவில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com