புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

விளம்பரங்களை முறைப்படுத்தும் விதமாக புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தார்.
புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் கிழக்கு, தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த 24 நாடுகள் பங்கேற்றன. இதனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை துவக்கி வைத்தார். 

அவருடன் மத்திய உணவு, நுகர்பொருள் விவகாரம் மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் பங்கேற்றார்.

இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

புதிய இந்தியாவின் முன்னேற்றத்தை கணக்கில் கொண்டு தவறான விளம்பரங்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் புதிய சட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் தவறான தகவல்களை விளம்பரம் செய்தால் அதன்மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேசத்தின் முன்னேற்றத்துக்கு நுகர்வோரின் பாதுகாப்பு அவசியமானது. எதிர்காலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலியான, தவறான தகவல்களை விளம்பரப்படுத்துவது அதிகரித்து வருகிறது. எனவே அதனை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்தோடு இந்த சட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்மூலம் கடந்த 1986 நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது 2015-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகிறது. இது தற்போதைய மற்றும் எதிர்கால நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் விதமாக இருக்கும். 

நாட்டின் பொருளாதாரம் சீர்திருத்தப்பட்டு வருகிறது. இதனால் வளர்ச்சி எவ்விதத்திலும் பாதிப்படையவில்லை. பொருளாதார கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி காரணமாக அனைத்து மறைமுக வரிகளும் நீக்கப்பட்டு நேரடி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிச்சுமை குறைந்துள்ளது. இதில் நுகர்வோர் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய பலனை ஏற்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டி முறையால் நிறுவனங்களின் இடையிலான போட்டி அதிகரித்துள்ளது. இது வளர்ச்சியை அதிகப்படுத்தும். எனவே பெருளின் மீதான விலை குறையும். அதனால் ஏழைகளும், நடுத்தர குடும்பங்களும் பலன் அடைவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com