ஐ.ஏ.எஸ் தேர்வில் "ப்ளூடூத்' மூலம் காப்பியடிக்க உடந்தை: ஐ.பி.எஸ் அதிகாரி மனைவி கைது

சென்னையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் "ப்ளூடூத்' உதவியுடன் காப்பியடித்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் கைது
ஐ.ஏ.எஸ் தேர்வில் "ப்ளூடூத்' மூலம் காப்பியடிக்க உடந்தை: ஐ.பி.எஸ் அதிகாரி மனைவி கைது

ஹைதராபாத்: சென்னையில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். தேர்வில் "ப்ளூடூத்' உதவியுடன் காப்பியடித்ததாக ஐ.பி.எஸ். அதிகாரி சபீர் கரீம் கைது செய்யப்பட்டார். தேர்வில் காப்பியடிக்க உடந்தையாக இருந்ததாக சபீர் கரீம் மனைவி ஜாய்ஸ் ஜோய் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை, இந்திய குடிமை பணிகள் தேர்வு வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இதில் ஐ.ஏ.எஸ். தேர்வுகளின் பொது அறிவுத் தேர்வு, சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

 இதற்கிடையே, அந்த தேர்வு வாரியத்தின் பறக்கும் படையினர் அந்த பள்ளியில் தேர்வு அறைகளில் திடீர் சோதனை செய்தனர். இச்சோதனையில் ஒரு தேர்வு அறையில் இளைஞர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் தேர்வு எழுதியதை பறக்கும் படையினர் கண்காணித்தனர்.

 அந்த இளைஞரைச் சோதனை செய்தபோது, அவர் காதில் செல்லிடப்பேசி "ப்ளூ டூத்'தை மாட்டிக்கொண்டு, எதிர்முனையில் இருப்பவரிடம் விடைகளைக் கேட்டு எழுதி வருவது தெரிய வந்தது. பறக்கும் படையினர் அந்த இளைஞரை சென்னை பெருநகர காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து புகார் அளித்தனர்.

 பெருநகர காவல் துறையின் கூடுதல் ஆணையர் எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் மனோகரன் ஆகியோர் அந்த இளைஞரிடம் பள்ளியில் தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபீர் கரீம் (30) என்பதும், ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்று, நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகே உள்ள ஏர்வாடி காவல் நிலையத்தில் 3 மாத காவல் நிலையப் பயிற்சி பெற்றுள்ளார் என்பதும், பின்னர் உத்தரகண்ட் மாநிலம், முசோரியில் உள்ள ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மையங்கள் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் போலீஸார், சபீர் கரீம் மீது மோசடி செய்ததாகவும், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசை ஏமாற்றியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர். 

விரிவான விசாரணைக்குப் பிறகு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஹைதராபாத்தில் உள்ள அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் சிலர் உதவியதாக விசாரணையில் தெரியவந்தது. 

இதையடுத்து ஹைதராபாத் விரைந்த தனிப்படை போலீஸார், தெலுங்கானா போலீஸாரின் உதவியுடன் தேடிவந்தனர். 

இந்நிலையில், தனது கணவரும் ஐ.பி.எஸ். அதிகாரியுமான சபீர் கரீம் தேர்வில் காப்பியடிக்க உதவியதாக இன்று காலை அவரது மனைவி ஜாய்ஸ் ஜோய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த லா எக்ஸ்லன்ஸ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மைய உரிமையாளர் ராம்பாபு ஹைதராபாத் அசோக் நகர் கிராஸ் சாலை அருகே போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஹைதராபாத்தில் போலீஸார் அதிக ஆதாரங்களை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாட்டிலேயே இந்திய குடிமைப்பணி தேர்வில் முறைகேட்டில் சிக்கி சிறை சென்ற முதல் ஐ.பி.எஸ் அதிகாரி சபீர் கரீம்  என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com