கருப்புப் பண ஒழிப்பில் ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர் மோடி, சுவிஸ் அதிபர் டோரிஸ் கூட்டாக அறிவிப்பு

கருப்புப் பண ஒழிப்பிலும், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி, சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லூதர்ட் ஆகியோர் கூட்டாக
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லூதர்ட், பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லூதர்ட், பிரதமர் நரேந்திர மோடி.

கருப்புப் பண ஒழிப்பிலும், வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி, சுவிட்சர்லாந்து அதிபர் டோரிஸ் லூதர்ட் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
மூன்றுநாள் பயணமாக இந்தியாவுக்கு வியாழக்கிழமை வந்த டோரிஸுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். டோரிஸுடன் அந்நாட்டு மூத்த அதிகாரிகள், வர்த்தக, தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பலர் வந்துள்ளனர்.
தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மோடியை, டோரிஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, சர்வதேச விவகாரம், இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு, கருப்புப் பண ஒழிப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், பருவநிலை மாற்றப் பிரச்னை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதன் பிறகு இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மோடி கூறியதாவது:
சர்வதேச அளவில் நிலவி வரும் பிரச்னைகள், இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக பேச்சு நடத்தினோம். கருப்புப் பண ஒழிப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகளில் இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பு தொடரும்.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் கருப்புப் பணம் வைத்திருப்பது தொடர்பான தகவல்களை அளிப்பது தொடர்பான சட்டம் தங்கள் நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று டோரிஸ் உறுதியளித்துள்ளார்.
அணு விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராவதற்கு சுவிட்சர்லாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பில் சுவிட்சர்லாந்து ஆதரவுடன்தான் இந்தியா உறுப்பினரானது என்றார் அவர்.
டோரிஸ் லூதர்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவது தொடர்பான சர்வதேச சட்டங்களை சுவிட்சர்லாந்து கடைப்பிடிக்கும். இப்போது கருப்புப் பணத்துக்கு எதிரான வலுவான சட்டங்கள் நம்மிடம் உள்ளன. இந்தியாவுடன் வர்த்தகம், முதலீட்டை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சு நடத்தினேன். இந்தியாவுக்கு உள்கட்டமைப்புத் துறைக்குத் தேவையான உதவிகளை அளிக்கத் தயாராக இருக்கிறோம்.
பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் அமைந்தது. இந்தியாவுடன் முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்து கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் முதலீட்டுக்கு உரிய பாதுகாப்பு தேவை. இது தொடர்பாக தொடர்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது என்றார்.
ரயில்வே துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, டோரிஸ் சந்தித்துப் பேசினார். அப்போது இருதரப்பு நலன்கள் குறித்த பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இதற்கு முன்னர், கடந்த 1998, 2003, 2007 ஆகிய ஆண்டுகளில் சுவிஸ் அதிபர் இந்தியாவுக்கு வந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்துக்கு சென்றார். அப்போது, அணு விநியோக நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக ஆதரவு அளிப்பதா சுவிஸ் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com