ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்

"ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிடைக்கக் கூடிய சாதகங்களை விட குறுகிய கால பாதகங்களே அதிகம் இருக்கும் என்பதால் அந்த நடவடிக்கையை நான் விரும்பவில்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் சாதகங்களை விட பாதகங்களே அதிகம்

"ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கிடைக்கக் கூடிய சாதகங்களை விட குறுகிய கால பாதகங்களே அதிகம் இருக்கும் என்பதால் அந்த நடவடிக்கையை நான் விரும்பவில்லை. எனது பதவிக் காலத்தின்போது இது தொடர்பாக முடிவெடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு எப்போதும் கேட்டுக் கொள்ளவில்லை' என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிய விட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு ரகுராம் ராஜன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி ஓய்வு பெற்றார். தற்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதார கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், ரகுராம் ராஜன் பல்வேறு பொருளாதார விவகாரங்கள் குறித்து ஆற்றிய உரைகளைத் தொகுத்து, ஆங்கிலத்தில் "ஐ டூ வாட் ஐ டூ' என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் குறித்த தனது கருத்துகளை அவர் முதல் முறையாக வெளிப்படுத்தியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
எனது பதவிக் காலத்தின்போது ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து முடிவெடுக்குமாறு ரிசர்வ் வங்கியை மத்திய அரசு எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டதில்லை. எனினும், அந்த நடவடிக்கை குறித்து எனது கருத்தைத் தெரிவிக்குமாறு அரசு கடந்த ஆண்டு (2016) பிப்ரவரி மாதம் கேட்டுக் கொண்டது. அப்போது எனது கருத்தை நான் வாய்மொழியாகத் தெரிவித்தேன்.
இந்த நடவடிக்கையால் நீண்ட காலப் பயன்கள் கிடைக்க வாய்புள்ளபோதிலும், குறுகிய காலத்தில் இதனால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் பாதகங்கள், அந்தப் பயன்களைக் குறைத்துவிடும் என்று நான் கருதினேன். ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற முறையில், முக்கியமான இலக்குகளை எட்டுவதற்கு ரூபாய் நோட்டு வாபûஸ விட சிறந்த மாற்று வழிகள் இருந்ததாகவே நான் நினைத்தேன். அதை அரசிடம் தெரிவித்தேன்.
எனது ஆட்சேபங்கள் இவ்வாறு இருந்தபோதிலும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை குறித்து ஒரு குறிப்பைத் தயாரித்து அளிக்குமாறு அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி ஒரு குறிப்பு தயாரிக்கப்பட்டு அது அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் சாதக - பாதகங்களையும், கருப்புப் பண ஒழிப்பு உள்ளிட்ட இலக்குகளை எட்டுவதற்கான மாற்று வழிமுறைகளையும் அந்தக் குறிப்பு விவரித்தது.
இந்த சாதக, பாதகங்களை ஆராய்ந்து, அதன் பிறகும் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை முன்னெடுப்பது என்று அரசு முடிவு செய்தால், அதற்குத் தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் அந்த முன்னேற்பாடுகளைச் செய்வதற்குத் தேவையான கால அவகாசம் ஆகியவற்றையும் அந்தக் குறிப்பில் தெரிவித்திருந்தோம். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் போதுமானவையாக இல்லாவிட்டால் என்ன நடக்கும்? என்பதையும் அந்தக் குறிப்பு எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதியாக அதன் துணை ஆளுநர் (கரன்சி பொறுப்பு) இடம்பெற்றார் என்று அந்தப் புத்தகத்தில் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம், ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் தாம் பங்கேற்கவில்லை என்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார். ரகுராம் ராஜனின் இந்தக் கருத்து தொடர்பாக ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநரின் கருத்தை அறிய செய்தியாளர் முயற்சி மேற்கொண்டும், அதற்குப் பலன் கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் செய்தித் தொடர்பாளருக்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புக்கும் பதில் இல்லை.
ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக ரிசர்வ் வங்கி அரசுக்கு அளித்த குறிப்பில் என்னென்ன விவரங்கள் இடம்பெற்றன என்ற விவரங்களை ரகுராம் ராஜன் வெளியிடவில்லை. பிரதமர் மோடி எடுத்த அந்த அதிரடி நடவடிக்கையை "கவனமாகத் திட்டமிடப்படாத மற்றும் சரிவரத் திட்டமிடப்படாத நடவடிக்கை' என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அந்த நடவடிக்கையால் ஏற்பட்ட கரன்சி நெருக்கடியை வங்கிகள் சமாளிப்பதற்கு அரசு எதிர்பார்த்ததை விட அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. வங்கிகளில் இருந்தும், ஏடிஎம் மையங்களில் இருந்தும் பணத்தை எடுப்பதற்கான விதிமுறைகளில் அடிக்கடி மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், குழப்பங்களையும், மக்களின் சிரமத்தையும் அதிகரித்தன.
இந்த நடவடிக்கையால் 50 நாள்களுக்கு அசௌகரியங்கள் இருக்கும் என்று மோடி கூறியிருந்தார். எனினும் அதையும் தாண்டி சில மாதங்கள் வரை மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். எனினும், மோடிக்கு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்களின் ஆதரவு கிடைத்ததாகவே கருதப்பட்டது. ஏனெனில், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்தது.

"கருப்புப் பண ஒழிப்பு இலக்கு நிறைவேறவில்லை'

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), அதற்கு அடுத்த இரண்டு காலாண்டுகளில் முறையே 6.1, 5.7 சதவீதமாகக் குறைந்தது. எனினும், ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் மட்டுமே இந்தச் சரிவு ஏற்படவில்லை என்று அரசு தெரிவித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ரகுராம் ராஜன், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜிடிபியில் ஏற்பட்ட சரிவானது 1 முதல் 2 சதவீதம் இருந்ததாக நான் பார்த்த மதிப்பீடுகள் காட்டுகின்றன. அது மிகப்பெரிய தொகையாகும். அதன் அளவு ரூ.2 லட்சம் கோடி முதல் ரூ.2.5 லட்சம் கோடி வரை இருக்கும்.
செல்லாதவையாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் அளவுக்கு வங்கிகளுக்குத் திரும்பி விட்டன என்ற தகவலானது, கருப்புப்பணத்தை ஒழிப்பது என்ற அரசின் இலக்கு நிறைவேறவில்லை என்பதையே காட்டுகிறது என்று ரகுராம் ராஜன் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com