நீர்வளத் துறை பொறுப்பை ஏற்கிறார் முதல்வர் கேஜரிவால்?

தில்லி நீர்வளத் துறை பொறுப்பை ஏற்க, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீர்வளத் துறை பொறுப்பை ஏற்கிறார் முதல்வர் கேஜரிவால்?

தில்லி நீர்வளத் துறை பொறுப்பை ஏற்க, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லி நீர்வளத் துறை அமைச்சராக இருக்கும் ராஜேந்திர பால் கௌதமை, அவரது இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்த கேஜரிவால், தனது முடிவை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2015}ஆம் ஆண்டு தில்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றது முதல் எந்தத் துறையையும் கேஜரிவால் தன்னிடம் வைத்துக் கொள்ளவில்லை.
இப்போது, நீர்வளத் துறைக்கு பொறுப்பேற்றால், அதுவே அவர் பொறுப்பேற்கும் முதல் துறையாக இருக்கும்.
கேஜரிவாலின் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து தில்லி அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லியில் கழிவுநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதற்கு ஆம் ஆத்மி அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. எனவே, கழிவுநீர் மற்றும் குடிநீர் தொடர்பான பிரச்னைகள் தனது நேரடி கண்காணிப்பின்கீழ் இருக்க வேண்டும் என்று கேஜரிவால் விரும்புகிறார்.
நகரில் பாதாள சாக்கடை அமைப்புகள், தில்லி குடிநீர் வாரியத்தின் (டிஜேபி) கட்டுப்பாட்டில் உள்ளன.
டிஜேபியின் தலைமை செயல் அதிகாரி உள்பட உயரதிகாரிகள், முக்கிய முடிவுகளை எடுக்கும்போது நீர்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதமின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேவேளையில், முதல்வர் அந்த துறைக்கு பொறுப்பேற்றால், அவரது அறிவுறுத்தல்களுக்கு உயரதிகாரிகள் கட்டுப்படும் நிலை ஏற்படும்.
மேலும், தலைநகரில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும்போது, துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற சூழலில், கேஜரிவால் மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, நீர்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பால் கௌதம் கூறுகையில், "தில்லி குடிநீர் வாரிய உயரதிகாரிகள், என்னை பணியாற்ற விடாமல் தடுக்கின்றனர்.
முக்கிய விவகாரங்களில் என்னிடம் ஆலோசனை நடத்தாமல், தன்னிச்சையாக முடிவு எடுக்கின்றனர்' என்று குற்றம்சாட்டினார்.
ராஜேந்திர பால் கௌதமிடம் இருந்து நீர்வளத் துறை பொறுப்பை கேஜரிவால் எடுத்துக் கொண்டாலும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலன், சமூக நலன் உள்ளிட்ட துறைகள் அவரிடமே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு குடிநீர் வாரிய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறுகையில், "லாஜ்பத் நகரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மண்டல பொறியாளர் ஒருவரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்று குடிநீர் வாரிய தலைமை செயல் அதிகாரியிடம் அமைச்சர் அறிவுறுத்தினார்.
ஆனால், தனது முடிவில் இருந்து திடீரென மாறிய அமைச்சர், அந்த பொறியாளரை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று கூறினார்.
ஆனால், அந்த பொறியாளர் தவறிழைத்திருப்பதை கருத்தில் கொண்டு, அமைச்சரின் அறிவுறுத்தலை தலைமை செயல் அதிகாரி ஏற்கவில்லை' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com