மோடி அமைச்சரவையில் மூத்த தலைவர்கள், முன்னாள் அதிகாரிகளுக்கு வாய்ப்பு!

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் உள்பட 9 புதுமுகங்கள் புதிய மத்திய அமைச்சரவையில் இடம்
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்ட புதிய மத்திய அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்ட புதிய மத்திய அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி.

அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் உள்பட 9 புதுமுகங்கள் புதிய மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:

1. அஸ்வினி குமார் (64): பாஜக-வின் மூத்த தலைவரான இவர் பிகார் மாநிலத்தின் பக்ஸர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர். ஏற்கெனவே மாநில சுகாதாரத் துறை அமைச்சராக இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
2. வீரேந்திர குமார் (63): மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் மக்களவைத் தொகுதி எம்.பி.யான விரேந்திர குமார், 1977-ஆம் ஆண்டு முதல் 1979-ஆம் ஆண்டு வரை பாஜகவின் மாணவர் பிரிவு ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார். இவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.
3. சிவ பிரதாப் சுக்லா (65): உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர். அந்த மாநிலத்தின் அமைச்சராக இருந்தவர். வழக்குரைஞரும், சமூக சேவகருமான இவருக்கு மாநில பாஜகவின் தலைமைப் பொறுப்பு 2012-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
4. அனந்த குமார் ஹெக்டே (49): தனது 28-ஆவது வயதிலேயே கர்நாட மாநிலத்தின் வடக்கு கன்னடா மக்களவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். அதனைத் தொடர்ந்து இடையில் ஒரே ஒரு முறை தவிர தொடர்ந்து 5 முறை எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழுக்களில் இடம் பெற்றவர். மேலும், இவர் ஒரு தற்காப்புக் கலை வீரர்.
5. சத்ய பால் சிங் (61): மகாராஷ்டிர மாநிலத்தில் 1980-ஆம் ஆண்டில் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர். அரசியலில் குதிப்பதற்காக மும்பை காவல்துறை தலைவர் பதவியை ராஜிநாமா செய்த இவர், ஆந்திரம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நக்ஸல்களுக்கு எதிராக திறமையாகச் செயல்பட்டதற்காக பல்வேறு பதக்கங்களைப் பெற்றவர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாக்பத் தொகுதி எம்.பி. ஆவார்.
6. கஜேந்திர சிங் ஷெகாவத் (49): ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவர், பாஜக-வின் விவசாயிகள் பிரிவுக்கான தேசியப் பொதுச் செயலர் ஆவார். விளையாட்டில் ஆர்வம் உடைய இவர், தேசிய அளவிலும், பல்கலைக்கழகங்கள் அளவிலும் நடைபெறும் கூடைப் பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
7. ஹர்தீப் சிங் புரி (65): முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரியான ஹர்தீப் சிங் புரி, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை ஐ.நா. சபைக்கான இந்தியப் பிரதிநிதியாகப் பொறுப்பு வகித்துள்ளார்.
8. ராஜ் குமார் சிங் (64): பிகாரில் 1975-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்ற ராஜ் குமார் சிங், மத்திய உள்துறைச் செயலராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது பிகாரின் ஆரா மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார்.
9. கே.ஜே. அல்போன்ஸ் கண்ணந்தானம் (64): கடந்த 1990-களில் மும்பையில் ஆயிரக்கணக்கான சட்டவிரோதக் கட்டடங்களை இடித்துத் தள்ளியதன் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. 2006-ஆம் ஆண்டில் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு முதலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு பாஜகவிலும் இணைந்தார். அவர் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com