ரூபாய் நோட்டு வாபஸ், டோக்கா லாம் விவகாரம்: மோடி அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நீண்ட காலத்தில் நாட்டுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்றும், டோக்கா லாம் பிரச்னையை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன்
ரூபாய் நோட்டு வாபஸ், டோக்கா லாம் விவகாரம்: மோடி அரசுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை நீண்ட காலத்தில் நாட்டுக்கு நன்மை அளிக்கக் கூடியது என்றும், டோக்கா லாம் பிரச்னையை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டது என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளார்.

முன்னதாக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையை விமர்சித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் அருகேயுள்ள பிருந்தாவனத்தில் நடைபெற்று வந்த ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்புகளின் மூன்று நாள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இதில், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஆர்எஸ்எஸ், அதன் துணை அமைப்பினர் விரிவாக விவாதித்து, தங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இறுதிநாள் நிகழ்ச்சியில் மன்மோகன் வைத்யா பேசியதாவது:
டோக்கா லாம் எல்லை பிரச்னையில் இந்தியாவின் பெருமையும், இந்திய ராணுவத்தின் வலிமையும் சர்வதேச அளவில் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடனான எல்லைப் பிரச்னையில் சீனா இதற்கு முன்பு தனது படைகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்தது இல்லை. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மிகச் சிறப்பாகக் கையாண்டது.
இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்ததுதான் சீனாவை யோசிக்க வைத்தது. இது சர்வதேச அளவில் இந்தியா குறித்த கருத்தை மாற்றியுள்ளது.
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டபோது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். பல சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், இந்த நடவடிக்கையால் நமது நாட்டுக்கு நீண்டகாலத்தில் அதிக நன்மை கிடைக்கும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டனர்.
உள்நாட்டில் சிறு தொழில்களை மேம்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
உள்நாட்டுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்பதில் ஆர்எஸ்எஸ் எப்போதும் உறுதியாக உள்ளது.
மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்தும், 2019}ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
ஜாதியத்தை ஒழிப்பது, ஆர்எஸ்எஸ் கொள்கைகளைக் கடைப்பிடிக்க மக்களை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றார் அவர்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com