அவதூறு வழக்கில் பதில் அளிக்க தாமதம்: கேஜரிவாலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

அவதூறு வழக்கில் பதில் அளிக்க தாமதம்: கேஜரிவாலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முதல்வர் அரவிந்த்  கேஜரிவாலுக்கு எதிராக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்த இரண்டாவது அவதூறு வழக்கில் பதில் அளிக்க ஏற்பட்ட தாமதத்திற்காக

மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி முதல்வர் அரவிந்த்  கேஜரிவாலுக்கு எதிராக ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்த இரண்டாவது அவதூறு வழக்கில் பதில் அளிக்க ஏற்பட்ட தாமதத்திற்காக முதல்வர்  கேஜரிவால் ரூ.5 ஆயிரம் அபராதம்  செலுத்துமாறு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜேட்லி பதவி வகித்த காலக்கட்டத்தில்,  பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்பட ஆம் ஆத்மி தலைவர்கள் சிலர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துகளைத் தெரிவித்ததாக கேஜரிவால் உள்ளிட்டோரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தில்லி உயர் நீதிமன்றத்தில் அருண் ஜேட்லி தரப்பில் அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மே 17-ஆம் தேதி குறுக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, ஜேட்லி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து,  முதல்வர்  கேஜரிவாலிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு புதிய வழக்கை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடுத்தார்.  இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு  முதல்வர் கேஜரிவாலுக்கு நீதிமன்றம் மே 23-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

ஆனால்,  நீதிமன்றம் நிர்ணயித்த தேதிக்குள் கேஜரிவால் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படாததால் ரூ.10 ஆயிரம் அபராதத்துடன் 2 வார காலம் கூடுதல் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற இணைப் பதிவாளர் பங்கஜ் குப்தா ஜூலை 26-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தில்லி உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது,  மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் வழக்குரைஞர்  மாணிக் டோக்ரா ஆஜராகி, "அவதூறு வழக்குத் தொடர்பாக   நீதிமன்றம் அளித்திருந்த இரண்டு வார கால அவகாசத்தையும் கடந்து தாமதமாக தனது எழுத்துப்பூர்வ பதிலை முதல்வர் கேஜரிவால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  இது முதல்வரின் தாமதிக்கும் உத்தியாகும் என்றார்.

தில்லி முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ரிஷிகேஷ் குமார், "உயர் நீதிமன்ற பதிவகம் இரு தருணங்களில் எழுப்பியிருந்த குறிப்பிட்ட தொழில்நுட்ப ஆட்சேபங்கள் காரணமாக முதல்வர் கேஜரிவாலால் தனது எழுத்துப்பூர்வ பதிலை  தாக்கல் செய்ய முடியவில்லை. இந்த காரணத்தின் அடிப்படையில், இத் தாமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் ' என்று முறையிட்டார்.

இந்தக் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொண்ட  நீதிமன்ற இணைப் பதிவாளர் பங்கஜ் குப்தா முதல்வர் கேஜரிவால் சார்பிலான தாமதத்தை ஏற்றுக்கொண்டார்.   எனினும்,  "இந்தத் தாமதமானது ரூ.5 ஆயிரம் செலவுத்தொகை டெபாசிட் செய்வதற்கு உள்பட்டதாகும். இத்தொகை ராணுவ நல நிதியில் (போரில் உயிரிழந்தோர்) செலுத்த வேண்டும்'  என உத்தரவிட்டார்.   

இதனிடையே,   முதல்வர் கேஜரிவால் தனது வழக்குரைஞர் அனுபம் ஸ்ரீவஸ்தவா மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில், "மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்த வழக்கு அவதூறுக்கு உகந்ததல்ல.  அது தள்ளுபடி செய்யப்பட வேண்டியதாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com