219 ஆசிரியர்களுக்கு தேசிய விருது: வெங்கய்ய நாயுடு அளித்தார்

ஆசிரியர்கள் 219 பேருக்கு தேசிய விருதுகளை அளித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு செவ்வாய்க்கிழமை கௌரவித்தார்.

ஆசிரியர்கள் 219 பேருக்கு தேசிய விருதுகளை அளித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு செவ்வாய்க்கிழமை கௌரவித்தார்.
தில்லி விக்யான் பவனில், ஆசிரியர் தினத்தையொட்டி, 219 ஆசிரியர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டு, 219 ஆசிரியர்களுக்கும் விருதுகளை அளித்தார். விழாவில் வெங்கய்ய நாயுடு, ஆசிரியர்களைப் பாராட்டிப் பேசியதாவது:
இந்தியாவின் வளர்ச்சியை வடிவமைப்பவர்களாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். தங்களது நேரத்தையும், சக்தியையும் அர்ப்பணித்து, புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு தனிநபர்களை ஆசிரியர்கள் உருவாக்குகிறார்கள்.
அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியா 100 சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக சாதனைப் படைப்பதற்கு, ஆசிரியர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்.
இந்தியா முந்தைய காலத்தில், உலகுக்கு கல்வி போதிக்கும் குருவாக திகழ்ந்தது. நாளந்தா, தட்சசீலம் ஆகிய இடங்களுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்விக் கற்க மக்கள் வருகை புரிந்தனர். தற்போது, அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கூட அறைகளை மகிழ்ச்சியுடன் கல்விக் கற்கும் மையங்களாக மாற்றுவோம் என்றும், இந்திய கல்வி அமைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வோம் என்றும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வெங்கய்ய நாயுடு கூறினார்.
விழாவில், ஆசிரியர்களுக்கான தேசிய கணினி மய உள்கட்டமைப்பு வசதியை வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், இணையமைச்சர் சத்யபால் சிங் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர்.
தேசிய விருது பெற்ற 219 ஆசிரியர்களில், 124 பேர், தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்ப ஆசிரியர்கள் ஆவர்.
ஆசிரியர் தினத்தையொட்டி, சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் தேசிய விருதுகளை அளித்து கௌரவிப்பதுதான் வழக்கமாகும். இந்த வழக்கத்துக்கு எதிராக ஆசிரியர்களுக்கான தேசிய விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அளித்துள்ளார்.
எனினும், தேசிய விருது பெற்ற 219 ஆசிரியர்களும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com