ஹெல்மெட் அணிந்த கொலையாளி, வெளிநாட்டுத் துப்பாக்கி: சிசிடிவி கேமராவில் பதிவான கௌரி லங்கேஷ் படுகொலை

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலைச் சம்பவம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. 
ஹெல்மெட் அணிந்த கொலையாளி, வெளிநாட்டுத் துப்பாக்கி: சிசிடிவி கேமராவில் பதிவான கௌரி லங்கேஷ் படுகொலை


பெங்களூர்: மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் கொலைச் சம்பவம் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. 

சமூக ஆர்வலரும், மூத்த பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பெங்களூரில் வெளியாகும் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியரும், இலக்கியவாதியுமான கெளரி லங்கேஷ் (55)  பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்துவந்தார். செவ்வாய்க்கிழமை காரில் வெளியே சென்றுவிட்டு இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய போது, மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கௌரியை கைத்துப்பாக்கியால் 7 முறை சுட்டுள்ளனர். 

இதில் நெற்றி, மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 குண்டுகள் பாய்ந்ததில் நிகழ்விடத்திலே கெளரி லங்கேஷ் உயிரிழந்தார். தகவலறிந்த ராஜராஜேஸ்வரி நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
 

உயிரிழந்த கெளரி லங்கேஷ், மூத்த பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்.  இடதுசாரி சிந்தனை கொண்ட இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருத்துகளைக் கூறி வந்தார். கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அமலாக்க ஆதரவு தெரிவித்தவர்.

முதற்கட்ட விசாரணையில், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளிகளை அடையாளம் காண காவல்துறை முயன்றது. வீட்டின் வெளிப்புறத்தில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் கதவருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் எடுத்தனர். இதில் ஒரு காமிராவில் படுகொலை சம்பவம் முழுவதும் பதிவாகியுள்ளது.

அதில், கௌரி லங்கேஷ் மிகவும் அருகே  இருந்து ஹெல்மெட் அணிந்த நபர் துப்பாக்கியால் சுடுகிறார். தப்பிச் செல்ல முயன்று இரண்டு அடிகளை எடுத்து வைத்த கௌரி நிலைகுலைந்து விழுகிறார். கொலையாளி கருப்பு நிற மேலாடை அணிந்திருப்பதும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை கொலைக்கு பயன்படுத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.

 ஆனால், அப்பகுதியில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருந்ததாரும், கொலையாளி ஹெல்மெட் அணிந்திருப்பதாகவும், கொலையாளிகளை அடையாளம் காண முடியவில்லை. அந்த விடியோ காட்சிகள் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பட்டாசு அல்லது துப்பாக்கி வெடித்தது போன்ற பயங்கர சத்தம் கேட்டு வெளியே வந்தோம். அப்போது கௌரி ரத்த வெள்ளத்தில் வீட்டு வாயிலில் கிடந்தார். இரண்டு மோட்டார் பைக்குகளின் சத்தம் கேட்டது என்கிறார்கள்.

முதற்கட்ட தகவலில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 கொலையாளிகள், கௌரியை மிகவும் அருகில் வைத்து சுட்டுள்ளனர். கௌரியின் உடலில் 3 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்திருந்த நிலையில், 4 தோட்டாக்களை சம்பவ இடத்தில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றினர்.

கொலையாளிகளைக் கண்டுபிடித்து அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com