இந்தியாவிலிருந்து ரோஹிங்கயா சமூகத்தினர் வெளியேற்றப்படுவார்கள்

மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கயா சமூகத்தினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து ரோஹிங்கயா சமூகத்தினர் வெளியேற்றப்படுவார்கள்

மியான்மரில் இருந்து சட்ட விரோதமாக இடம்பெயர்ந்துள்ள ரோஹிங்கயா சமூகத்தினர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அண்டை நாடான மியான்மரில் உள்ள ராகைன் மாகாணத்தில் ரோஹிங்கயா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து, அச்சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களில் 14,000 பேர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அகதிகளாகப் பதிவு பெற்று, சட்டப்படி நம் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 40,000 பேர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 
அவர்களை வெளியேற்றும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. எனினும், தங்களை மியான்மருக்கு அனுப்பக் கூடாது என்று அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி ரோஹிங்கயா சமூகத்தினர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்தியாவில் உள்ள ரோஹிங்கயா சமூகத்தினர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார்களா? இல்லையா? என்பதை சர்வதேச அமைப்புகளுக்குக் கூற விரும்புகிறேன். அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் சட்டப்படி குடியேறியவர்கள் இல்லை என்பதால் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள்தான். நம் நாடு மிகப்பெரிய ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
உலகிலேயே மிக அதிகபட்ச எண்ணிக்கையாலான அகதிகளுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. எனவே அகதிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்.
இந்த விவகாரத்தில் (ரோஹிங்கயா அகதிகள் பிரச்னை) நாங்கள் சட்டத்தின்படி நடக்கிறோம். அப்படி இருக்கும்போது நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்கள் என்று ஏன் குற்றம்சாட்டுகிறார்கள்? என்பது புரியவில்லை.
ரோஹிங்கயா சமூகத்தினரை வெளியேற்றும் நடவடிக்கையைத் தொடங்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என்றார் கிரண் ரிஜிஜு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com