இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவோம்: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் உறுதி

டோக்கா லாம் விவகாரத்தை மறந்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் உறுதிபூண்டனர். 
சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கைகுலுக்கிய பிரதமர் நரேந்திர மோடி.
சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கைகுலுக்கிய பிரதமர் நரேந்திர மோடி.

டோக்கா லாம் விவகாரத்தை மறந்து, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவோம் என்று பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் உறுதிபூண்டனர். 
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, சீனாவில் பயணம் மேற்கொண்டார். ஜியாமென் நகரில் அவரும், சீன அதிபரும் ஜீ ஜின்பிங்கும் இருதரப்பு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தினர்.
மோடி பேசும்போது, பிரிக்ஸ் உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக ஜீ ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, இந்தியா-சீனா இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு எல்லையில் அமைதியைப் பராமரிப்பது மிகவும் அவசியம் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடி, டுவிட்டர் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'அதிபர் ஜீ ஜின்பிங்கைச் சந்தித்தேன். நாங்கள் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தையை நடத்தினோம்' என்று குறிப்பிட்டார்.
இரு தலைவர்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேச்சு நடத்தினர். அப்போது கூட்டுப் பொருளாதாரக் குழு, பாதுகாப்புக் குழு, இரு நாடுகளும் முன்னேறிச் செல்ல உதவும் குழு போன்ற அரசுகளிடையிலான குழுக்களை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இத்தகவலை இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவரிடம், 'டோக்கா லாம் பிரச்னையை இரு நாடுகளும் மறந்து விட்டனவா?' என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 'தற்போது நடைபெற்றிருப்பது எதிர்காலத்தை நோக்கிய பேச்சுவார்த்தைதானே தவிர, கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் விவாதம் அல்ல' என்று அவர் பதிலளித்தார். ஜெய்சங்கர் மேலும் கூறியதாவது:
இரு தரப்புக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இரு நாட்டு பாதுகாப்புப் படையினரும் வலுவான தொடர்புகளையும், ஒத்துழைப்பையும் பராமரிக்க வேண்டும் என்பதோடு சமீபத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிகழ்வுகள் (டோக்கா லாம் பிரச்னை) மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
இரண்டு அண்டை நாடுகள் அல்லது இரண்டு பெரிய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அந்த வேறுபாடுகள் பரஸ்பர மரியாதையுடன் கையாளப்படுவதோடு, அவற்றைத் தீர்க்க பொதுவான செயல்திட்டத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரு தரப்பும் தங்களிடையிலான கருத்து வேறுபாடுகள் தகராறுகளாக மாறுவதை அனுமதிக்கக் கூடாது என்று தலைவர்கள் மீண்டும் உறுதிபூண்டனர். நமது உறவுகளை மேலும் மேம்படுத்துவது என்பது இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது என்பதை இரு தலைவர்களும் வலியுறுத்தினர் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அண்மையில் டோக்கா லாம் விவகாரத்தால் ஏற்பட்ட கசப்புணர்வைச் சமாளிப்பதற்கு இரு தரப்பும் ராஜீய ரீதியில் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், மோடி-ஜின்பிங் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

'பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை' 
 பயங்கரவாதத்துக்கு எதிராக பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு சீனாவின் ஜியாமென் நகரில் நடைபெற்று வருகிறது.
அந்த மாநாட்டின் இடையே, 'பிரிக்ஸ் - புதிய சந்தைகளும் வளரும் நாடுகளும்' என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருந்தாலும், பிற நாடுகளுடன் கைகோத்துச் செல்லவே விரும்புகிறது. காரணம், நாங்கள் என்ன செய்தாலும் அது உலக அளவில் குறிப்பிட்ட அளவிலான தாக்கத்தை உருவாக்கும். எனவே, பிரிக்ஸ் அமைப்பின் மூலம் உலக நன்மைக்காக செயல்படுவதை எங்களது கடமையாகக் கருதுகிறோம்.
பிரிக்ஸின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளை பொற்காலமாக ஆக்குவது குறித்து ஏற்கெனவே பேசியிருக்கிறேன். துடிப்பான அணுகுமுறைகள், கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கை நம்மால் அடைய முடியும்.
உலக மக்களில் ஏறத்தாழ பாதி பேர் வசிக்கும் பிரிக்ஸ் நாடுகளால் இந்த மாற்றத்தை ஏற்படுத்த நிச்சயம் முடியும்.
அதற்காக, 10 அம்சங்களை நிறைவேற்ற பிரிக்ஸ் நாடுகள் உறுதிகொள்ள வேண்டும்.
பயங்கரவாதத்துக்கான போராட்டத்தை பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்வது அந்த அம்சங்களில் ஒன்றாகும்.
மேலும், கூட்டு நடவடிக்கைகளின் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், பணித் திறன் மேம்பாடு, சுகாதாரம், தகவல் தொடர்பு, நல்லிணக்கம், தொழில்நுட்பம் போன்ற மேலும் சில அம்சங்களை பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இந்த நிகழ்ச்சியில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தவிர, எகிப்து, தஜிகிஸ்தான், தாய்லாந்து, மெக்ஸிகோ, கென்யா ஆகிய நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com