கொல்கத்தா: ஆர்எஸ்எஸ் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்த அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டது ரத்து: மே.வங்க அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு, மாநில அரசுக்குச் சொந்தமான அரங்கத்துக்கு பதிவு செய்யப்பட்ட முன்பதிவு திடீரென ரத்து

கொல்கத்தாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்கும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு, மாநில அரசுக்குச் சொந்தமான அரங்கத்துக்கு பதிவு செய்யப்பட்ட முன்பதிவு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க அரசுக்குச் சொந்தமான மகாஜதி சதன் அரங்கத்தை சகோதரி நிவேதிதாவின் 150-ஆவது பிறந்ததின கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்துவதற்கு, அவரது பெயரில் செயல்படும் தொண்டு அமைப்பின் சார்பில் அடுத்த மாதம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அடுத்த மாதம் 3-ஆம் தேதி கலந்து கொண்டு உரையாற்றவிருந்தார். இந்த முன்பதிவை மேற்கு வங்க அரசு திடீரென ரத்து செய்துள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை (எமர்ஜென்சி) அமலில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தேசியச் செயலாளர் ராகுல் சின்ஹா, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், 'ராணுவ வீரர்கள் மைதானத்தில் மோகன் பாகவத் முன்பு உரையாற்றவிருந்தபோதும், அதை தடுத்து நிறுத்த மாநில அரசு முயற்சித்தது. நீதிமன்றத்தின் உத்தரவுப் பெற்றே, அந்நிகழ்ச்சியை நான் நடத்தினேன். ஆர்எஸ்எஸ்-பாஜகவை கண்டு மாநில அரசு ஏன் அச்சப்படுகிறது? சகோதரி நிவேதிதா தொடர்புடைய நிகழ்ச்சி அதுவாகும். அதை அரசியலாக்குவதற்கான காரணத்தை மாநில அரசு தேடிக் கொண்டிருக்கிறது. இது பழிவாங்கும் அரசியலாகும்' என்றார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் மன்மோகன் வைத்யா, சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'ஏழைகள், ஆதரவற்ற பெண்களுக்காக சகோதரி நிவேதிதா தொண்டு அமைப்பு செயல்படுகிறது; ஆர்எஸ்எஸ் அமைப்பை பழிவாங்கும் நோக்கில், அந்த அமைப்பின் நிகழ்ச்சியை மம்தா பானர்ஜி ரத்து செய்துவிட்டார். தீவிரவாத சக்திகளை சாந்தப்படுத்தும் நோக்கிலேயே இதை அவர் செய்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பாஜக, ஆர்எஸ்எஸ் குற்றச்சாட்டுகளை மேற்கு வங்க அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து மாநில உணவுப்பொருள் விநியோகத்துறை அமைச்சரும், மகாஜன் சதான் அரங்கத்தை சீரமைக்கும் பணிக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் குழுத் தலைவருமான ஜோதிபிரியா முல்லிக் கூறுகையில், 'குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை முகாந்திரமில்லாதவை ஆகும். அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை கருத்தில் கொண்டு, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரையிலான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சிகளை ரத்து செய்வது தொடர்பான முடிவு, சில நாள்களுக்கு முன்புதான் எடுக்கப்பட்டது. இதுகுறித்த தகவல்கள், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து அமைப்புகளிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது' என்றார்.
சகோதரி நிவேதிதா தொண்டு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'நிகழ்ச்சிக்காக அரங்கத்தை ஜூன் மாதம் முன்பதிவு செய்தோம். ஆனால், கடந்த வாரம் திடீரென நிகழ்ச்சிக்கு காவல்துறையின் அனுமதி தேவைப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதற்கு காவல்துறையின் அனுமதி ஏற்கெனவே பெறப்பட்டு விட்டதாக நாங்கள் தெரிவித்தபோது, சீரமைப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com