தண்ணீர் பிரச்னைதான் எதிர்காலத் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும்: நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி

தண்ணீர் பிரச்னைகள்தான் எதிர்கால தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்கப் போகிறது என்று மத்திய கொள்கைக் குழு (நீதிஆயோக்) தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்

தண்ணீர் பிரச்னைகள்தான் எதிர்கால தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விளங்கப் போகிறது என்று மத்திய கொள்கைக் குழு (நீதிஆயோக்) தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை (சிஐஐ) சார்பில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நீர்வள மேலாண்மை கருத்தரங்கில் பங்கேற்ற அவர் இதுதொடர்பாக பேசியதாவது:
உலக அளவில் இந்தியாவில்தான் விவசாயத்துக்கு கூடுதலாக தண்ணீர் பயன்படுத்தப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிராம் தானியங்களை விளைவிக்க சீனா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தும் தண்ணீரைக் காட்டிலும் இந்தியாவில் 3 சதவீதம் அதிகமாகச் செலவிடப்படுகிறது.
தண்ணீர் என்பது அதிமுக்கியமான இயற்கை வளம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் விளங்குகிறது.
இந்தியாவைப் பொருத்தவரை நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பஞ்சார், ஹரியாணா, தில்லி போன்ற மாநிலங்களில் தண்ணீர் பயன்பாட்டில் எந்த ஒழுங்குமுறையும் இல்லை. அதன் காரணமாகவே, அந்த மாநிலங்கள் அனைத்தும் பாலைவனமாக மாறத் தொடங்கியுள்ளன.
வறட்சி சூழலை நோக்கி நாடு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதற்குள்ளாக நீர் மேலாண்மைத் திட்டங்களை ஆக்கப்பூர்வமாகச் செயல்படுத்த வேண்டிய சவால்கள் நம் முன்னே உள்ளன.
எதிர்காலத்தில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் சக்தியாக தண்ணீர் பிரச்னைகள் உருவெடுக்கப் போகின்றன. நீர் மேலாண்மைத் திட்டங்களை திறம்பட மேற்கொள்பவர்களே ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற நிலை உருவாகும்.
தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காணாத ஆட்சியாளர்கள் தோல்வியைச் சந்திப்பார்கள் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com