விதிமீறல்: 2.09 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து; வங்கிக் கணக்குகள் முடக்கம்

நிறுவனச் சட்டத்தின் விதிகளை மீறி, ஒழுங்காற்று நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 2.09 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நிறுவனச் சட்டத்தின் விதிகளை மீறி, ஒழுங்காற்று நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 2.09 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அத்தகைய நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரி ஏய்ப்பு செய்வதற்காக பெயரளவில் மட்டும் இயங்கி வரும் 'ஷெல் நிறுவனங்கள்' என்றழைக்கப்படும் நிறுவனங்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளது.
அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நிறுவனச் சட்டத்தின் ஒழுங்காற்று நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறிய 2 லட்சத்து 9 ஆயிரத்து 32 நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், அந்த நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் என்ற தகுதியை இழந்துள்ளன. அந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் நிறுவனங்களின் சார்பாக கையெழுத்திட அங்கீகாரம் பெற்ற பிற அனைவரும் அந்த தகுதியை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக, மீண்டும் பதிவு பெற்ற நிறுவனம் என்ற தகுதியைப் பெறும் வரை அந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை அவர்களால் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, அத்தகைய வங்கிக் கணக்குகளை முடக்குமாறு நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைப் பிரிவின் மூலம் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவு ரத்து செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மட்டுமல்லாமல், பொதுவாக அனைத்து நிறுவனங்களின், குறிப்பாக பதிவு ரத்து செய்யப்படாத நிலையிலும், இதுவரை நிதிநிலை அறிக்கை வெளியிடாத நிறுவனங்களின் வங்கிக் கணக்குப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு 3 லட்சம் வரி மோசடி நிறுவனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 1.75 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டதாகவும் தனது சுதந்திர தின உரையின்போது பிரதமர் மோடி கூறியிருந்தார்.
இந்திய நிறுவனச் சட்டத்தின் பிரிவு 248 (1)-இன்படி, நீண்ட காலம் இயங்காமல் உள்ள நிறுவனங்கள் உள்பட ஒழுங்காற்று நெறிமுறைகளை மீறும் பல்வேறு நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய நிறுவனப் பதிவாளருக்கு உரிமை உண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com